நடிகர் தனுஷ், ‘ராஞ்ஜனா’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். சோனம் கபூர் நாயகியாக நடித்திருந்தார். இது தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
இந்நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு ஆக.1-ம் தேதி தமிழில் ரீ ரிலீஸ் ஆனது. படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். ஆனால், ரீ-ரிலீஸில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனுஷ் உயிரோடு வருவது போல மாற்றப்பட்டுள்ளது. இதற்குப் படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனுஷும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஏஐ உதவியால் ‘ராஞ்ஜனா’வின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டிருப்பது என்னைத் தொந்தரவு செய்ததுடன் படத்தின் ஆன்மாவைச் சிதைத்துவிட்டது. என் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்டவர்கள் இந்த மாற்றத்தைச் செய்துள்ளனர். இது 12 ஆண்டுகளுக்கு முன் நான் நடித்த படம் இல்லை.
திரைப்பட உள்ளடக்கங்களை, ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றுவது கலை மற்றும் கலைஞர்களுக்குக் கவலையளிக்கும் முன்னுதாரணம். இது கதைசொல்லலின் நேர்மையையும் சினிமாவின் மரபையும் அச்சுறுத்துகிறது. இது போன்ற செயல்களைத் தடுக்க வருங்காலங்களில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.