ரவி மோகனின் அனைத்து திறமைகளையும் இந்த உலகம் பார்க்க வேண்டும் என்று பாடகி கெனிஷா தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார் ரவி மோகன். இதன் தொடக்கவிழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிவராஜ்குமார், ஜெனிலியா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் கலந்து கொண்டு ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்த விழாவில் ரவி மோகனின் தோழி பாடகி கெனிஷா பேசும் போது, “நான் ஒரு பாடகி, இசை தயாரிப்பாளர், ஆன்மிக சிகிச்சையாளர், இப்போது ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’-ன் பங்குதாரர். இந்த வாய்ப்பை வழங்கிய ரவி மோகன் அவர்களுக்கு நன்றி. கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் நன்றி. அம்மா, அப்பா மற்றும் ராஜா அண்ணா அவர்களுக்கு நன்றி. நான் நீண்ட காலமாக தனிமையில் இருந்தேன். இப்போது ரவி அவர்களின் மூலம் இப்படி அழகான மனிதர்கள் கிடைத்துள்ளார்கள்.
நாங்கள் இருவரும் இணைந்து, ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை பெரிய அளவில் பிரபலமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். எங்களின் கனவும் அதுதான். எங்களுடைய குழு இல்லாமல் இன்றைய நாள் சாத்தியம் ஆகியிருக்காது.
ரவி, பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையை கடந்து வந்து இருக்கிறார். அவருக்கு என்ன சோகம் இருந்தாலும், வலி இருந்தாலும் வெளியில் அதை காட்டிக் கொள்ளாமல் மற்றவரிடம் பழகுவார். அது சரிதான். ஆனால், யார் உங்களிடம் வந்தாலும், அவர் இருளில் இருந்தாலும் நீங்கள் அவர் வாழ்க்கையை வெளிச்சமாக மாற்றி விடுகிறீர்கள் ரவி.
இப்போது என்னிடம் ரவி மோகனின் 7 முழு ஸ்கிரிப்ட் உள்ளது. உங்களின் அனைத்து திறமைகளையும் இந்த உலகம் பார்க்க வேண்டும். எனக்கு மிகப் பெரும் பேராசை உள்ளது. என்னவென்றால், இந்த உலகத்திலுள்ள அத்தனை மனிதரும் உங்களுள் இருக்கும் கடவுளை பார்க்க வேண்டும். அந்த கடவுளை நான் பார்த்து விட்டேன். வெற்றிக்கான நாட்கள் குறைவாகதான் உள்ளது. அதற்காக நீங்கள் அதிக உழைப்பை கொடுத்துள்ளீர்கள்.
நீங்கள் ஒருநாள் வரலக்ஷ்மி அம்மாவுடன் இருந்தால் தெரியும், ரவி மோகன் அவர்கள் ஏன் இவ்வளவு சிறந்த மனிதராக இருக்கிறார் என்று. இப்படிப்பட்ட ஒருவரை கொடுத்ததற்கு நன்றி அம்மா” என்று பேசினார் கெனிஷா.