‘துரந்தர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் ‘தெய்வத் திருமகள்’ சாரா அர்ஜுன்.
ரன்வீர் சிங் பிறந்த நாளை முன்னிட்டு ‘துரந்தர்’ படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதை தமிழகத்தில் பார்த்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏனென்றால், ‘தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சாரா அர்ஜுன், இதில் ரன்வீர் சிங்கிற்கு நாயகியாக நடித்திருக்கிறார். ரன்வீர் சிங்குடன் அவர் வரும் காட்சிகளை வைத்து இணையத்தில் பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.
இயக்குநர் ஆதித்யா தர் (உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) இயக்கத்தில் உருவாகி வரும் ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். மர்மம், துணிச்சல், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்தவையாக ‘துரந்தர்’ படத்தின் டீஸர் அமைந்திருக்கிறது.
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை பி62 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதி தேஷ் பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆதித்யா தர் எழுதி இயக்கியிருக்கும் ‘துரந்தர்’ திரைப்படம் – தெரியாத மனிதர்களைப் பற்றிய சொல்லப்படாத கதையை விவரிக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது.