ஸ்ருதிஹாசன் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். ஆமிர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆக.14-ல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டி, இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர், “என் தந்தையும் (கமல்ஹாசன்) ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள், தமிழ் சினிமாவின் முகங்களாக இருப்பவர்கள். ரஜினிகாந்தை, பொதுமக்களின் பார்வையில் இருந்தும் அவரை ஒரு சூப்பர் ஸ்டாராகவும் என் அப்பாவின் பார்வையில் இருந்தும் அறிந்திருக்கிறேன்.
ஆனால், கூலி படப்பிடிப்பில் நேரடியாக அவரை அறிவது சுவாரஸ்யமாக இருந்தது. அவர் தனித்துவமான பல்வேறு குணாதிசயங்களின் கலவையைக் கொண்டவர். மிகவும் கூர்மையானவர். அவர் படப்பிடிப்பு தளத்துக்கு எப்போதும் நல்ல எனர்ஜியுடன் வருகிறார். அவருடன் பணியாற்றுவதை அனைவரும் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.