ரஜினி சுயசரிதை எழுதி வருவதை உறுதி செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ படம் வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக அளித்த பேட்டியொன்றில் ரஜினி தனது சுயசரிதையை எழுதி வருவதை லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தி இருக்கிறார். முன்னதாக, இது குறித்த தகவல் வெளியானாலும் யாருமே உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.
ரஜினி சுயசரிதை குறித்து லோகேஷ் கனகராஜ், “’கூலி’ படத்தின் கடைசி 2 ஷெட்டியூலில் ரஜினி சார் அவருடைய சுயசரிதை எழுதுவதில் மும்முரமாக இருந்தார். தினமும் மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கும் போது, இப்போது எந்த எபிசோட் சார் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்பேன். இந்த வயதில் இதெல்லாம் நடந்தது என்றெல்லாம் சொல்வார். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுமே எவ்வளவு தடைகளை தாண்டி இந்த இடத்துக்கு வந்துள்ளேன் என்பதை ஒப்புக் கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இப்பேட்டியில் ‘ஜெயிலர் 2’ படத்தை முடித்துவிட்டு நீண்ட ஒய்வில் இருக்கப் போகிறார் ரஜினி எனவும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சமயத்தில் தனது சுயசரிதையை முழுமையாக முடிக்க ரஜினி திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.