ரஜினி – கமல் இணையும் படத்தினை இயக்குகிறேனா என்ற கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் பதிலளித்துள்ளார்.
‘ட்யூட்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதற்காக அளித்த பேட்டியில் “ரஜினி – கமல் இணையும் படத்தை இயக்குகிறீர்களா?” என்ற கேள்விக்கு “அந்தப் படத்தை நான் இயக்கவில்லை. இப்போது நான் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். ஆகையால் இப்போது அதைப் பற்றி பேசினால் சரியாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
மேலும், இப்பேட்டியில் ’லவ் டூடே’ மற்றும் ‘டிராகன்’ படங்கள் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியதையும் பகிர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். ‘டிராகன்’ படத்தில் தான் சிகரெட்டை சுண்டிவிடும் காட்சியை ரஜினி நடித்துக் காட்டியதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். ‘எல்.ஐ.கே’ படத்துக்குப் பிறகு தான் இயக்கி, நடிக்கும் சயின்ஸ் பிக்சன் கதையில் மட்டுமே கவனம் செலுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ட்யூட்’. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் தமிழக உரிமையினை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.