ரஜினியை பார்த்தே தனக்கு சினிமா பிடித்ததாக சிவகார்த்திகேயன் கல்லூரி விழா ஒன்றில் பேசியிருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கோயம்புத்தூரில் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.
அங்கு ‘மதராஸி’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது ரஜினி குறித்து சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “எனக்கான ஊக்கம், ஆதர்சம் எல்லாமே ரஜினி சார் தான். அவரைப் பார்த்துதான் எனக்கு சினிமாவை பிடித்தது. அவரைப் பார்த்து தான் சினிமாவுக்கு வரவேண்டும் என்று தோன்றியது. அவருடைய குரலில் பேசிதான் கைதட்டல்கள், பணம், வாய்ப்பு எல்லாமே வாங்கினேன்” என்று பதிலளித்தார் சிவகார்த்திகேயன்.
கோயம்புத்தூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கொச்சிக்கு சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அங்கு ‘மதராஸி’ விளம்பரப்படுத்தும் நிகழ்வினை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் விளம்பரப்படுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து இறுதியாக படக்குழுவினர் அனைவரும் பங்குபெறும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றும் சென்னையில் நடைபெற உள்ளது.