ரஜினியே அத்தனை வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார் என்று ‘தாவுத்’ இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி குறிப்பிட்டார்.
டர்ம் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் லிங்கா, சாரா ஆச்சர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாவுத்’. அடிதடி, வெட்டு குத்து, சண்டைக் காட்சிகள் எதுவுமே இல்லாத வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக இது உருவாகி இருக்கிறது. செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குநர் சுசீந்திரன் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் ராதாரவி பேசும் போது, “சமீபமாக எனக்கு உடல் நிலை சரியில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். சினிமாக்காரன் எப்போதும் தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டு தூங்க வேண்டும், இல்லையெனில் வேறு ஆளை போட்டு விடுவார்கள். இந்தப்படத்தில் இரண்டு நாள்கள் தான் வேலை பார்த்தேன். தம்பிதுரை தான் தயாரிப்பாளர் ஆனால் அவர் பெயர் வரவில்லையே எனப் பார்த்தேன், ஆனால் படத்தில் கதாப்பாத்திரத்திற்கு அந்தப்பெயர் வைத்து விட்டார். வாழ்த்துக்கள்.
படத்தில் பேய் இருக்கிறதா? ரத்தம் இருக்கிறதா? எனக்கேட்டேன். ஆனால், எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்றைய காலத்தில் இதெல்லாம் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. ரஜினியே அத்தனை வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார். அவரே ரத்தத்தை நம்பும்போது நம்மைச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. படத்தில் நாம் கொஞ்சம் சுயநலமாகத் தான் இருக்க வேண்டும். கதாப்பாத்திரத்திற்கு தயாரிப்பாளர் தன் பெயர் வைத்தது போல இருக்க வேண்டும். படம் மிக அருமையாக வந்துள்ளது.
எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தமிழ் வாழ வேண்டும் என்றால் அனைவரும் தமிழ்ப்படங்கள் பார்க்க வேண்டும்” என்று பேசினார் ராதாரவி.