லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார்.
’கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால்,. அப்படத்துக்கு முன்னதாக ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன.
இதனை கமல்ஹாசன் சைமா விருது விழாவில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “தரமான சம்பவம் என்பதில்தான் ஆபத்தே இருக்கிறது. தரம் எப்படி இருக்கிறது என்பதை ஆடியன்ஸ்தான் சொல்லவேண்டும். நாங்கள் இருவரும் இணைந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நாங்கள் விரும்பி பிரிந்திருந்தோம். காரணம் ஒரு பிஸ்கட்டை பிரித்து ஆளுக்கு பாதியாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆளுக்கு ஒரு பிஸ்கட் வேண்டும் என்று விரும்பினோம். அதை வாங்கி நன்றாக சாப்பிட்டோம். இப்போது மறுபடியும் அரை பிஸ்கட் போதும் என்னும் சந்தோசம் எங்களுக்கு உள்ளது.
எனவே நாங்கள் ஒன்றாக இணைய உள்ளோம். எங்களுக்கு இடையிலான போட்டி நீங்கள் ஏற்படுத்தியதுதான். எங்களுக்கு அது போட்டியே கிடையாது. எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். அப்போதே நாங்கள் முடிவு செய்துவிட்டோம் இப்படித்தான் நாங்கள் இருக்க வேண்டும் என்று. அப்படித்தான் அவரும் இருக்கிறார் நானும் இருக்கிறேன்.
வியாபார ரீதியாகத்தான் இப்போது இணைகிறோமே தவிர எங்களுக்கு இது எப்போதோ நடக்க வேண்டியது, இப்போதாவது நடக்கிறதே, நடக்கட்டும் என்பது போலத்தான் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் ஒருவர் படத்தை ஒருவர் தயாரிக்க எப்போதும் விரும்பியிருக்கிறோம். ஆனால் இப்போது வேண்டாம் அப்போது வேண்டாம் என்று நாங்களே எங்களை தடுத்துக் கொண்டிருந்தோம்” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
ரஜினி – கமல் – லோகேஷ் கனகராஜ் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் வெளியீடு ஆண்டு இறுதிக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.