லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘கூலி’. இந்தப் படத்தின் ட்ரெய்லரில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தீ’ படத்தின் ரெஃபரென்ஸ் இருப்பதாக பேசப்படுகிறது. அது குறித்து பார்ப்போம்.
‘கூலி‘ படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
வரும் 14-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. இதை முன்னிட்டு சுமார் 3.02 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இந்த ட்ரெய்லரின் 2.54-வது நிமிடத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தீ’ படத்தின் ரெஃபரென்ஸ் இருப்பதாக பேசப்படுகிறது. அந்த ஒரு ஃப்ரேமில் மட்டும் ரஜினிகாந்த் பழைய பாணியில் அதிக தலைமுடியுடன் சிகரெட்டை பற்ற வைத்தபடி நடந்து வருவது போல் உள்ளது. அந்த ஃப்ரேம் ஃபிளாஷ்பேக்கை நினைவுப்படுத்தும் வகையில் கலர் கிரேடிங் செய்யப்பட்டுள்ளது.
‘கூலி’ படத்தின் கதைக்களம் என்ன? – “பரபரப்பான தொழிலாளர் முனையங்களையும், ரகசிய கடத்தல் கும்பல்களையும் பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தப் படம், தினக்கூலித் தொழிலாளர்களை துன்புறுத்தும் ஓர் இரக்கமற்ற குற்றப் பின்னணி கும்பலை எதிர்த்துப் போராடும் ஓர் அச்சமற்ற, வறுமைப் பின்னணி கொண்ட ஒரு துறைமுக கூலித் தொழிலாளியைப் பற்றி பேசுகிறது.
ஆற்றல், மன உறுதி மற்றும் ஸ்டைல் உடன் அவர் நீதிக்காக மட்டுமின்றி, தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கவும் கிளர்ந்தெழுகிறார். இதில் வின்டேஜ் ரஜினியின் ஸ்டைல் மற்றும் லோகேஷ் கனகராஜின் விறுவிறுப்பான கதைசொல்லல் உடன் ஸ்டைலிஷ் ஆன ஆக்ஷன் காட்சிகளும், அதிரடியான மாஸ் தருணங்களும் இடம்பெற்றுள்ளன.” என்பதே ‘கூலி’ படத்தின் கதைக்களமாகும். இதில் ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
‘தீ’ படத்தின் கதை என்ன? – கடந்த 1981-ல் வெளியான படம் ‘தீ’. இதில் ராஜா என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். நடிகர் சுமன், ‘ரவி’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினியின் இளைய சகோதரராக நடித்திருப்பார்.
தொழிலாளர் சங்க தலைவரின் மகன்களான ராஜாவும், ரவியும் சிறுவயது முதல் சந்திக்கும் சங்கடங்கள், வளர்ந்த பிறகு இருவரது திசையும் எப்படி மாறுகிறது என்பது கதை. ரஜினிகாந்த் இதில் தங்கம் கடத்தும் கும்பலில் ஒருவராக நடித்திருப்பார். தங்க கடத்தலை தடுக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரியாக இருக்கும் சுமன் வசம் வரும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை.
ரஜினிகாந்த் தங்க கடத்தலில் ஈடுபடுவதற்கு முன்பாக இந்த படத்தில் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலையை கவனிக்கும் கூலி தொழிலாளியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து கடத்தல் தொழிலில் கைதேர்ந்தவராக அவர் உருவெடுப்பார். இந்தப் படத்தில் கோட் சூட் அணிந்து கொண்டு மிகவும் ஸ்டைலாக ரஜினிகாந்த் நடித்திருப்பார்.
கூலி, தீ ஒற்றுமை என்ன? – கூலி மற்றும் தீ என இரண்டு படத்திலும் பொதுவான விஷயங்கள் சில உள்ளன. இரண்டு படங்களிலும் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக ரஜினிகாந்த் வருகிறார். இரண்டு படத்திலும் தங்க கடத்தல் பொதுவான விஷயமாக உள்ளது. இதையெல்லாம் வைத்து கூலி படத்தில் உள்ள ‘தீ’ படத்தின் ரெஃபரென்ஸ் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.