பு துமுகம் தேவ், நாயகனாக அறிமுகமாகும் படம், ‘யோலோ’. சாம் இயக்கியுள்ள இதில் தேவிகா, படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், செப். 12-ல் வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, அமீர், சமுத்திரக்கனி என பலர் கலந்துகொண்டனர்.
ஆர்.கே.செல்வமணி பேசும்போது கூறியதாவது: யோலோ என்றால் என்ன என்று கேட்டேன். ‘யு ஒன்லி லிவ் ஒன்ஸ்’ என்பதன் சுருக்கம் என்றார்கள். உண்மை தான், நாம் ஒரு முறை தான் வாழ்கிறோம், அதை அழகாக வாழ்வோம். இந்தப் படத்தில் எல்லோரும் இளமையாக இருக்கிறார்கள். எல்லோரும் தங்கள் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள். சமுத்திரக்கனி, அமீர் ஆகியோருடன் இதன் இயக்குநர் சாம் வேலை செய்திருக்கிறார். அதுவே அவர் திறமையைச் சொல்லும்.
என் முதல் படத்துக்குச் சம்பளம், ரூ.14 ஆயிரம்தான். அடுத்த படத்துக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்கள். அதனால் முதல் படத்தின் சம்பளத்துக்கு அலையாதீர்கள். முதல் படத்தோட பட்ஜெட் என்னவோ, அது தான் உங்கள் சம்பளம். ஏனெனில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் ரூ.1 கோடி போடுகிறார் என்றால், அதுதான் என் சம்பளம். அப்படி இயக்குநர்கள் நீங்கள் நினைத்தால்தான் அடுத்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க முடியும்” என்றார்.