கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர் ‘வேடன்’. கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள்தான் சமீபநாட்களாக ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெறுபவை. புரட்சிகரமான பாடல் வரிகள் மூலம் கவனம் பெற்ற இந்த வேடன் யார்? அவரது பின்னணி என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
வேடன் என்ற மேடைப் பெயரால் பிரபலமாக அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர். 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் காலகட்டத்தில் ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தனது முதல் இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டு புகழ் பெற்றார். இந்தப் பாடல் தீயாய் பரவி அவரை பிரபலமாக்கியது. சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அடுத்து 2021-ம் ஆண்டு, ஜோஜு ஜார்ஜ், குஞ்சாகோ போபன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘நாயாட்டு’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ‘நரபலி’ என்ற பாடலை பாடியிருந்தார். 2022-ஆம் ஆண்டு வெளியான ‘நோ வே அவுட்’ படத்தின் ‘மரணத்தின் நிறம்’ என்ற பாடலையும் பாடியிருந்தார்.
தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘குத்தந்திரம்’ என்ற பாடலுக்காக இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுடன் கைகோத்தார். கேன்ஸ் விழாவில் விருது பெற்று உலக அளவில் கவனம் ஈர்த்த ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தில் ‘கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்’ பாடலையும் எழுதிப் பாடியிருந்தார்.
டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘நரிவேட்டை’ படத்தில் ‘வாடா வேடா’ என்ற வேடன் எழுதி பாடியுள்ளார். இதில் பழங்குடியினரின் போராட்டம், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை முன்னிறுத்தி எழுதப்பட்ட வரிகள் பரவலாக கவனம் பெற்று வருகிறது. இன்னும் பல்வேறு திரைப்படங்களில் பணிபுரிந்து வரும் வேடன், இன்னொரு பக்கம் அதே சுயாதீன இசை ஆல்பங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படி குறுகிய காலத்தில் பிரபலமான வேடனின் வாழ்க்கையில் சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. 2021-ஆம் ஆண்டு வேடனுக்கு எதிராக ‘மீ டூ’ பாலியல் புகார் முன்வைக்கப்பட்டது. தன் தவறை ஒப்புக்கொண்ட வேடன் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.
அதேபோல கடந்த ஏப்ரல் மாதம், கஞ்சா வைத்திருந்ததாக கூறி வேடனை கொச்சியில் போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் சில மணி நேரத்திலேயே சிறுத்தை புலியின் பல் பொருத்தப்பட்ட செயின் அணிந்திருந்ததாக கேரள வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் பெரும்பாவூர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் வேடனுக்கு ஜாமீன் வழங்கியது.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த அவர், “நான் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிப்பேன். நான் என்னைத் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். என்னைக் ரசிப்பவர்கள் அனைவரும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் நல்ல பழக்கங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று ஊடகங்களின் முன் தெரிவித்தார்.
இன்னொரு பக்கம் தனது பாடல்களின் இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் அடிக்கடி வேடன் அவமதிக்கிறார் என பாஜக நிர்வாகிகள் சிலர் வேடன் மீது அண்மையில் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
அதேசமயம் சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் மத்தியிலும் வேடனுக்கு ஆதரவு குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பலரும் பாடலின் வரிகளையும், பாடல் துணுக்குகளையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாகவும், ஸ்டோரிகளாகவும் இடம்பெறச் செய்து வேடனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.