லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் திரையரங்குகளில் வெளியான முதல் நான்கு நாட்களில் ரூ.404 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லாஜிக் ஓட்டைகள், விடையில்லா கேள்விகள் என இணையத்தில் வறுத்தெடுக்கப்பட்டாலும், வசூலில் கவனிக்கத்தக்க முன்னேற்றம் கண்டது. ‘கூலி’ வெளியான நாளிலிருந்து சமூக வலைதளங்களில் அதிகம் பாராட்டப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர், படத்தில் வில்லனாக நடித்திருந்த மலையாள நடிகர் சவுபின் ஷாஹிர். மற்றொருவர் கன்னட நடிகை ரச்சிதா ராம்.
வழக்கமாக லோகேஷ் படங்களில், தொடக்கத்தில் முக்கியத்துவம் இல்லாததாக காட்டப்படும் ஒரு கேரக்டர் ஒரு கட்டத்தில் திடீரென வீறுகொண்டு எழுந்து ஆக்ரோஷமாக சண்டையிடும். ‘கைதி’ படத்தில் ஜார்ஜ் மரியான், விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா போன்றவை உதாரணம். அப்படியான ஒரு கதாபாத்திரம்தான் ‘கூலி’ படத்தில் ரச்சிதாவுக்கு வழங்கப்பட்டது. முந்தைய இரண்டு கதாபாத்திரங்கள் பாசிட்டிவ் ஆனவை என்றால், இந்தப் படத்தில் ரச்சிதாவுக்கு முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரம். அதை சிறப்பாகவே செய்திருந்தார் ரச்சிதா.
தமிழ் ரசிகர்களுக்கு இவர் இதற்கு முன்பு அதிகம் பரிச்சயம் இல்லையென்றாலும், கன்னடத்தில் இவரை ‘டிம்பிள் குயின்’ (கன்னக்குழி அரசி) என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். அதுமட்டுமின்றி கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரும் கூட.
பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த ரச்சிதா, 2013-ஆம் ஆண்டு வெளியான ’புல்புல்’ படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகம் ஆனார். இது தெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டார்லிங்’ படத்தின் ரீமேக் ஆகும். கன்னடத்தில் பிளாக்பஸ்டரான இப்படம் ரச்சிதாவை பிரபலம் ஆக்கியது.
2015ஆம் ஆண்டு சுதீப் உடன் இவர் நடித்த ‘ரன்னா’ படத்துக்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான ஃப்லிம்பேர் விருது கிடைத்தது. சக்ரவ்யூஹா (2016), புஷ்பக விமானம் (2017), பர்ஜரி (2017), அயோக்யா (2018), சீதாராம கல்யாண (2019), நடசார்வபவுமா (2019), ஆயுஷ்மான் பவ (2019), மான்சூன் ராகா (2022) மற்றும் கிராந்தி (2023) உள்ளிட்ட படங்களின் மூலம் ரச்சிதா கன்னட ரசிகர்களின் நீங்கா இடம் பிடித்த நடிகையாகி விட்டார்.
குறிப்பாக 2019ஆம் ஆண்டு வெளியான ‘சீதாராம கல்யாண’, ‘நடசார்வபவுமா’, ‘ஐ லவ் யூ’ போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன. எனினும் 2020-ஆம் ஆண்டு ரச்சிதா நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த இடைவெளிக்கு காரணம், ‘ஐ லவ் யூ’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி. உபேந்திரா நாயகனாக நடித்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘மாட்டனாடி மாயவடே’ என்ற பாடலில் இடம்பெற்ற காதல் காட்சிகள் ரச்சிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் புயலை கிளப்பிவிட்டது.
அதற்கு முன்பு கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்காத ரச்சிதா, அந்தப் பாடலில் உபேந்திராவுடன் மிக நெருக்கமாகவும் அதீத கவர்ச்சியாகவும் நடித்ததை அவரது பெற்றோர் ரசிக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தில் பெரிய பிரச்சினை வெடித்தது. இதனால் தன்னுடைய சொந்த வீட்டைவிட்டே ரச்சிதா வெளியேற்றப்பட்டதாகவும் கூட கூறப்படுகிறது.
பின்னர் ஒரு பேட்டியில் பேசிய ரச்சிதா, அந்தப் பாடல் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்தும், தன்னுடைய பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டது குறித்தும் கண்ணீருடன் பகிர்ந்திருந்தார்.
“உன்னை ஒரு நடிகையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எங்களுடைய மகளாக அல்ல” என்று தனது தாய் கூறியதையும் அந்தப் பேட்டியில் ரச்சிதா அழுதபடி நினைவு கூர்ந்திருந்தார்.
இந்த சர்ச்சைக்குப் பிறகு உடனடியாக அந்தப் பாடல் திரையரங்குகளிலிருந்து படக்குழுவினரால் நீக்கப்பட்டது. ஓடிடியில் படம் வெளியானபோது கூட அந்த பாடல் சென்சார் செய்யப்பட்டு வெளியானது. யூடியூபில் அப்பாடலின் வீடியோ வெளியான போதும் அதீத கவர்ச்சியான காட்சிகள் சென்சார் செய்யப்பட்டே வெளியானது. இந்த விவகாரம் கன்னட திரைத்துறையில் பெண்களை அதீத கவர்ச்சிப் பொருளாக காண்பிப்பது குறித்த விவாதங்களை கிளப்பியது.
இந்த விவகாரத்துக்குப் பிறகு உபேந்திரா உடன் ரச்சிதா ராம் எந்தப் படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் ‘கூலி’ உபேந்திரா ஒரு முக்கிய கேமியோ செய்திருக்கிறார். எனினும் உபேந்திராவும், ரச்சிதாவும் சேர்ந்து வரும் காட்சிகள் படத்தில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்ச்சையால் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்ட ரச்சிதா ராம் அதிலிருந்து மீண்டு வந்து, கன்னடத்தில் 2022-ல் ‘மான்சூன் ராகா’, 2023-ல் ‘கிராந்தி’ முதலான படங்கள் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸ்சை மிகச் சிறப்பாகத் தொடங்கினார். அவர் தனது நடிப்பாற்றலால் இழந்த இடத்தை மீண்டும் எளிதில் எட்டிப் பிடித்தார்.
இந்தச் சூழலில்தான் ‘கூலி’ படத்தில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பதன் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றுவருகிறார். கன்னடத்தில் இரண்டாம் இன்னிங்ஸை வலுடவுன் தொடங்கியிருக்கும் அவருக்கு, இனி தமிழிலும் வாய்ப்புகள் குவியும் என்பதில் சந்தேகம் இல்லை.
சக நடிகைகள் போல சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஈர்க்கும் போட்டோஷூட் போஸ்ட்களைத் தவிர்க்கும் ரச்சிதா ராம் ‘கூலி’ படத்தில் தனது கதா6பாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து வெளியிட்ட குறும்பதிவு ஒன்று கவனிக்கத்தக்கது.
அதில், “‘கூலி’ படத்தில் எனது கல்யாணி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என் கதாபாத்திரத்துக்கு கிடைத்த விமர்சனங்களும், அன்பும் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஊடகம், விமர்சகர்கள், மீம்கள், ட்ரோல் செய்தவர்கள் என அனைவருக்கும் என் நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார் ரச்சிதா ராம்.