‘நான் தான் சிஎம்’ என்ற படத்துக்கு எழுந்த சர்ச்சைக்கு, பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிலடிக் கொடுத்துள்ளார்.
பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரிக்க இருப்பதாக ‘நான் தான் சி.எம்’ என்ற படத்தை அறிவித்தார். அப்போது வெளியிட்ட பதிவில், இப்படத்தில் சிங்காரவேலன் என்ற அரசியல்வாதியாக நடிக்கவிருப்பதாகவும், சோத்துக் கட்சி என்பது கட்சியின் பெயர் எனவும், படகுதான் சின்னம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதுவே சர்ச்சையாக உருவானது.
பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில், “பயமில்லை – ஆனால் பயனில்லை! ஆட்ஷேபம் தெரிவிப்பது யாவும் நாங்கள் ஆள் / ஆழ் நோக்கமின்றி வைக்கப்பட்ட கற்புள்ள கற்பனை பெயர்களே! CM பக்கத்தில் rhyming ஆக ‘சி’ இருக்க வேண்டுமென (மெனக்கெடாமல்) வைத்த பெயரே சிங்காரவேலன். ஆனால் அது மரியாதைமிகு சிங்காரவேலரை குறிப்பிடுவதால் அதை உடனடியாக மாற்ற மனதார சம்மதிக்கிறேன் / மதிக்கிறேன் கவனத்தில் இட்டதற்கு!
Boat-ம் அப்படியே தடாலடியாக அதை கவிழ்த்து வேறு சின்னம் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்படம் மீனவ சமுதாயப் படமல்ல. ‘சோத்துக் கட்சி’ என்பது கால் நூற்றாண்டுகளுக்கு முன் மறைந்த சோ தலைமையில் 1000 பேருக்கு 10 கிலோ அரிசி கொடுத்துத் துவங்கப்பட்டது. அந்த ‘சோ’த்துக் கட்சி பெயரை மாற்ற வாய்ப்பே இல்லை. இல்லாதவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே அவசிய அரசியல். அதை என் எல்லா படங்களும் பேசும். இப்போது இப்படமும். அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
முற்றுகை போராட்டம் போன்ற அநாவசிய / வசிய விளம்பரங்கள் என் படத்திற்கு தேவையல்லை. மீனவ நண்பர்களை மட்டுமல்ல யார் மனதையும் இந்த CM சீர் கெட செய்ய மாட்டான் என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.