‘மோனிகா’ பாடல் வைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
’கூலி’ படத்தில் இடம்பெற்றுள்ள மோனிகா பாடல் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக இதில் சவுபின் சாகிரின் நடனம் அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. இப்பாடல் உருவான விதம் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அப்பேட்டியில், “மோனிகா பாடல் வியாபார நோக்கத்திற்காக வைக்கப்பட்டது தான். என் படங்களில் அப்படியான பாடல்கள் இடம்பெறாது. முழுமையாக த்ரில்லர் பாணியில் படம் இருக்கும் போது, கதையில் ஒரு சின்ன ரிலாக்ஸ் தேவைப்பட்டது. படமாக பார்க்கும் போது அப்பாடல் தவறாக தெரியாது. கதையோடு போய்விடும். கதைப்படி அப்பாடலில் ரஜினி சார் வரமுடியாது.
நிஜத்தில் அந்த இடத்தில் அப்பாடல் வைக்கப்பட்டதற்கு காரணம் சவுபின் சாகிர் தான். ஏனென்றால் ’பீஸ்ம பரவம்’ படத்தில் அவருடைய நடனம் ரொம்பவே பிடிக்கும். கதைப்படி இந்தக் கதாபாத்திரம் இப்படியொரு நடனம் செய்தால் எப்படியிருக்கும் என்று திட்டமிடப்பட்டு அப்பாடல் வைக்கப்பட்டுள்ளது. ‘கூலி’ படத்தில் அவ்வளவு நடிகர்கள் இருக்கும் போது, தயாரிப்பு நிறுவனம் விளம்பரப்படுத்த ஏதாவது கொடுக்க வேண்டும். என்னால் காட்சிகளை கொடுக்க முடியாது. அதனால் வைக்கப்பட்டது தான் மோனிகா பாடல்” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள ‘கூலி’ படத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.