பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நடிகை கஸ்தூரி, சமூகப் பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது குரல் கொடுத்து, சமூக செயல்பாட்டாளராக இருந்தார். அண்மையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாஜகவில் நேற்று அதிகாரபூர்வமாக இணைந்தார்.
இது குறித்து கஸ்துரி அளித்த பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் பேச்சு சுதந்திரம், பெண்கள் சுதந்திரம் உள்ளிட்ட எதுவுமே இல்லை. சுதந்திரமாக உயிர்வாழ கூட முடியவில்லை. சமீபமாக நடந்த பல சம்பவங்கள் எனக்கு கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறை எதிர்த்து குரல் கொடுக்கும் போது, ஆளுக்கட்சி தரப்பில் இருந்துதான் எதிர்ப்பு வந்தது.
சங்கி, பாஜகவின் ஊதுகுழல், அண்ணாமலையின் ஆள் என்று பல விமர்சனங்கள் வந்தது. அநீதிக்கும், அநியாயத்துக்கும் குரல் கொடுக்கும்போது நடுநிலையாக இருந்தாலுமே திமுகவின் எதிர்ப்பு பாஜகதான் என்று என் தலையில் ஏற்றிவிட்டார்கள். ஆகையால் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து சுதந்திரமாக மக்கள் பணி செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டேன். இதைத்தானே நாங்கள் பல நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அவர் சொன்னார். அதனால், ஒரே நேர்கோட்டில் சிந்தித்ததால் பாஜகவில் இணைந்தேன்.
முதலில் கட்சி அரசியல் செய்யக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தேன். பெண் உரிமை, சட்ட உரிமை சார்ந்து ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கும்போது, பல்வேறு நல்ல செயற்பாட்டாளர்களை அரசியல் பார்வையுடன் தான் பார்க்கிறார்கள். அப்படி பெயர் வைக்கும்போது, அந்தப் பெயரை நிஜத்தில் சுமந்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. அதையடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூரு’க்குப் பிறகு பிரதமர் மோடிக்கு ஏதாவது ஓர் அணிலாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். பாஜகவில் இணைந்தேன்” என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.