‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ படங்களை இயக்கிய மு.மாறன், அடுத்து இயக்கி இருக்கும் திரைப்படம் ‘பிளாக்மெயில்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இதை ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கிறார்.
ஆக.1-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி மு.மாறனிடம் பேசினோம்.
“இது த்ரில்லர், டிராமா ஜானர் கதை. வழக்கமான லைன்தான். ஆனா, திரைக்கதை பரபரப்பா இருக்கும். மருந்து பொருட்களை சப்ளை பண்ற ஹீரோவுக்கும் ஒரு மருந்தகத்துல வேலை பார்க்கிற ஹீரோயின் தேஜு அஸ்வினிக்கும் காதல் வருது. அதுல ஏற்படற ஒரு பிரச்சினையை சரிபண்ண போகிற ஹீரோ சந்திக்கிற விஷயங்கள்தான் கதை. இது கோவையில நடக்கிற படம். மொத்தம் 50 நாள் ஷூட் பண்ணினோம். அதுல 35 நாட்கள் ‘நைட் ஷூட்’. அங்க இருக்கிற ஈஷா யோகா மையம் உள்பட முக்கியமான இடங்கள்ல படப்பிடிப்பை நடத்தியிருக்கோம். கதையில ‘பிளாக்மெயில்’ ஒரு மையப்புள்ளியா இருக்கும்” என்று ஆரம்பிக்கிறார் மு.மாறன்.
பிளாக்மெயிலோட தன்மை பணம் பறிக்கறது… இதுல என்ன சொல்றீங்க?
பணம் பறிக்கறது மட்டுமல்ல, வேற நோக்கமாகவும் இருக் கலாம். இதுல அந்த தன்மை, படம் முழுவதும் டிராவலா கிட்டே வரும். கதைக்குள்ள பல பேர் பிளாக்மெயில் பண்ணு வாங்க. அது எப்படி, என்னனங்கறதுதான் திரைக்கதை.
ஜி.வி.பிரகாஷை எப்படி தேர்வு பண்ணுனீங்க?
முதல்ல, கதை ரெடியானதும் யாரை வச்சு பண்ணலாம்னு நானும் தயாரிப்பாளரும் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப ரெண்டு பேருக்கும் முதல் ‘சாய்ஸா’ வந்தவர் ஜி.வி.பிரகாஷ் தான். அவரை பார்த்துக் கதை சொன்னோம். கேட்டதுமே ஓகே சொல்லிட்டார். கரெக்ஷனோ, வேற எதுவுமோ சொல்லலை. உடனடியா ஷூட்டிங் போயிட்டோம்.
படத்துல நிறைய கதாபாத்திரங்கள் இருக்கே?
ஒரு ஆறேழு கேரக்டர்கள் இருக்காங்க. அவங்களைச் சுற்றித் தான் கதை நடக்கும். எல்லோருக்குமே கதையில முக்கியத்து வம் இருக்கு. அதனால யாரை தேர்ந்தெடுக்கலாம்னு நினைச்சதும் நல்லா நடிக்கத் தெரிஞ்சவங்களை செலக்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். அப்படித்தான் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, ரமேஷ் திலக், முத்துக்குமார், தேஜு அஸ்வினி, ஹரிப்பிரியான்னு தேர்வு பண்ணினோம். எல்லோருமே அருமையா நடிச்சிருக்காங்க.
பொதுவா த்ரில்லர் படங்களுக்கு இசை ரொம்ப முக்கியம்…
கண்டிப்பா. இந்தப் படத்துக்கு முதல்ல டி.இமான் இசை அமைப்பாளரா ஒப்பந்தமானார். திருநங்கைகளோட வலியை சொல்ற ‘ஒத்துக்கிறியா?’ அப்படிங்கற ஒரு பாடலையும் பண்ணினார். தவிர்க்க முடியாத சில காரணங்களால, அவரோட தொடர்ந்து பயணிக்க முடியல. அப்ப எனக்கு சட்டுனு ஞாபகத்துக்கு வந்தவர், சாம் சிஎஸ். அவரோட ஏற்கெனவே ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ பண்ணியிருக்கேன். சந்திச்சு கதை சொன்னதும் பண்ணலாம்னு சொல்லிட்டார். நாலு பாடல்கள் இருக்கு. ஒரு பாடலை இமான் சார் பண்ணியிருக்கார். மற்ற மூணு பாடலை சாம் சிஎஸ் பண்ணிருக்கார். பின்னணி இசையையும் ரொம்ப அருமையா அமைச்சிருக்கார்.
இப்ப, ஓடிடி நிறுவனங்கள் த்ரில்லர் கதைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறதா சொல்றாங்க… அதனாலதான் அப்படி ஒரு கதையை தேர்வு பண்ணுனீங்களா?
ஓடிடி நிறுவனங்களை மனசுல வச்சு, நான் கதை எழுதறதில்லை. தியேட்டருக்கு வர்ற பார்வையாளர்களை ‘என்கேஜ்’ பண்ணணும், அவங்களுக்கு ஒரு திரை அனுபவத்தைக் கொடுக்கணும் அப்படிங்கறதுக்காக, அதை மனசுல வச்சுதான் கதை பண்றோம். பொதுவா இன்னைக்கு தியேட்டருக்கு வர்றவங்க குறைஞ்சுட்டாங்க. அப்படி வர்றவங்களை தக்க வைக்கறதுக்கு, சீட் நுனிக்கு இழுத்து உட்கார வைக்கிறதுக்கு த்ரில்லர், ஹாரர் படங்கள் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். அதனால அப்படியொரு கதையை எழுதினேன்.
படப்பிடிப்புல என்ன பிரச்சினைகளை சந்திச்சீங்க?
படப்பிடிப்புல பிரச்சினை ஏதுமில்லை. நான் இயக்கிய முதல் படமான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, எடுத்த வேகத்துலயே முடிஞ்சு உடனடியா ரிலீஸ் ஆயிடுச்சு. இரண்டாவது படமான ‘கண்ணை நம்பாதே’ கோவிட், அப்புறம் சில பிரச்சினைகளால லேட்டாச்சு. இந்த ‘பிளாக் மெயில்’ படத்துக்கு அது போல பிரச்சினை இல்லைனாலும் சின்ன சிக்கலை சந்திச்சது உண்மைதான். அதுக்கு ஜி.வி. பிரகாஷ், சம்பளத்துல பாதியை வாங்காம படத்தை முடிங்கன்னு சொன்னார். அதே போல காந்த் சாரும் உதவி பண்ணினார். இதனால படத்தை எங்களால சீக்கிரம் முடிக்க முடிஞ்சுது. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு திருப்தியான உணர்வை கொடுக்கும்னு நம்பறேன்.