அறிவியல் புனைகதையைக் கூடச் சுவாரஸ்யமாக எழுதிவிடலாம்; ஆனால், நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்றின் கதையை நாவலாக எழுத முடியாது என்று சலித்துக்கொள்கிறார் எழுத்தாளர் ஜோதி ராமையா (சத்யராஜ்). ஆனால், ஆட்டோ ஓட்டுநரான கண்ணனின் (காளி வெங்கட்) வாழ்க்கையை உற்றுநோக்கி, நடுத்தரக் குடும்பம் ஒன்றின் கதையை அவர் நாவலாக எழுத முயலும்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறார். தன்னால் அடுத்தக் கட்டத்தில் அடி எடுத்து வைக்க முடியாது என்று தெரிந்தும், வாரிசுகளையாவது தலைநிமிரச் செய்துவிட வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கும் மிடில் கிளாஸ் அப்பாவின் வாழ்க்கைப் பக்கங்கள்தான் கதை.
சத்யராஜை வைத்துக் கதை சொன்ன உத்தி, தொடக்கத்தில் தொந்தரவுபோல் தோன்றினாலும், ஒரு கட்டத்தில் அவரது குரலையும் முகத்தையும் தேடத் தொடங்கிவிடுகிறது மனம். நடுத்தரக் குடும்பங்களுக்கேயுரிய தன்னிறைவற்ற பொருளாதாரம் உள்ளிட்ட போதாமைகளைத் தாண்டி, கண்ணனின் குடும்பம் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வதைச் சித்தரிக்க, தன்னுடைய கதாபாத்திரங்களை இயக்குநர் கார்த்திகேயன் மணி கையாண்ட விதத்தில் யதார்த்தம்.
கண்ணனின் மகள் தீபிகா (ரோஷினி ஹரிப்ரியன்) தனக்குப் பெற்றோர் பார்த்த வரனைச் சந்தித்தபின் முடிவெடுப்பது, மின்சாரக் கசிவால் தன் செல்ல நாயான பிரவுனியைப் பறி கொடுக்கும் மகன் தினேஷ் (விஷ்வா), வட்டார மின்வாரியச் செயற்பொறியாளருடன் சண்டைக்குப் போய் வழக்கு வாங்குவது ஆகிய சம்பவங்கள் அப்பாவின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு அழுத்தம் சேர்த்திருக்கின்றன.
படம் பார்க்கும் ஓவ்வொருவரும் அவர்களுடைய அப்பாவை நினைத்துக் கொள்ளும் விதமாக, ஆழமான நடிப்பால் கொள்ளையடிக்கிறார் காளி வெங்கட். சின்ன விஷயங்களிலும் நம்பகத்தன்மையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
நடிகர்களைத் தேர்வு செய்த விதம், அவர்களைக் கதாபாத்திரமாக நடிப்பில் உருமாற்றிய விதம் இரண்டும் ‘ஆஹா’ என்று சொல்ல வைக்கின்றன. இயக்குநர் எந்த அளவுக்குச் சிரிக்க வைக்கிறாரோ அந்த அளவுக்கு கண்களையும் குளமாக்கிவிடுகிறார்.
இப்படத்துக்கு உயிரோட்டம் மிக்க இசை (கே.சி.பால சாரங்கன்), கதாபாத்திரங்களைப் பின்தொடரும் ஒளிப்பதிவு (ஆனந்த் ஜி.கே.), கச்சிதமான படத்தொகுப்பு (சதிஷ்குமார் சமுஸ்கி), நடுத்தர வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் கலை இயக்கம் (ஜாக்கி ) ஆகிய அம்சங்கள் முழுமை சேர்த்திருக்கின்றன.
நடுத்தரக் குடும்பம் ஒன்றின் வாழ்க்கையை போலித்தனமின்றி சொன்ன விதத்தில் இந்தப் படம் உங்கள் நேரத்தையும் பணத்தையும் மதிக்கும் குடும்ப சினிமா.