‘மெட்ராஸ் மேட்னி’ கதையைக் கேட்டவுடன் அப்பா ஞாபகம் வந்ததாக நடிகர் காளி வெங்கட் பேசும்போது குறிப்பிட்டார்.
கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ஜூன் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் காளி வெங்கட் பேசும்போது, “முதலில் எஸ்.ஆர்.பிரபு சாருக்கு நன்றி, ஒரு படம் எப்படிப்பட்ட படம் என்பது நீங்கள் வாங்கும்போது தெரிந்துவிடும், அதற்காக அவருக்கு நன்றி, சத்யராஜ் சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. படம் முடியும் தருவாயில்தான் இயக்குநர் அவரை அணுகினார் ஆனால், எந்த தயக்கமும் இல்லாமல் படம் செய்து தந்தற்கு நன்றி. வடிவேல் சாருக்கு மிக்க நன்றி.
அபிஷேக் மூலம்தான் இயக்குநரைச் சந்தித்தேன், வீட்டுக்கு கூப்பிட்டு கதை சொன்னார். அதுவே எனக்குப் புதிதாக இருந்தது, இந்தக் கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள், நான் அதிகம் சொல்லவில்லை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.