சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, கீதா கைலாசம், பானுப்பிரியா என பலர் நடித்துள்ள படம், ‘மெட்ராஸ் மேட்னி’. ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு கே.சி.பாலசாரங்கன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் மணி இயக்கியுள்ளார்.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
படம் பற்றி கார்த்திகேயன் மணி கூறும்போது, “ஐடி படித்துவிட்டு அது தொடர்பான வேலையில் இருந்தேன். சினிமா ஆசை சிறு வயதிலேயே இருந்தது. கரோனா காலகட்டத்தில் சங்க இலக்கியம் படிக்க ஆரம்பித்தேன். தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வம் அதிகமானது. பின்னர் ‘கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே’ என்ற புறநானூற்றுப் பாடலை மையமாக வைத்து குறும்படம் ஒன்றை எடுத்தேன். திரைப்பட விழாக்களில் அதற்கு வரவேற்பு கிடைத்தது. பிறகு அமெரிக்க நண்பர் ஒருவர் படம் எடுக்க உதவுவதாகச் சொன்னார். அவர் உதவியுடன் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை இயக்கியுள்ளேன்.
இது நான் பிறந்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நகரில் பார்த்த சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை. ஃபேமிலி டிராமா கதைதான். போலித்தனம் ஏதுமின்றி உண்மையான கதையாக இருக்கும். சத்யராஜ் அறிவியல் புனைகதை எழுத்தாளராக நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது” என்றார்.