முதல் 3 நாட்களுக்கு பப்ளிக் ரிவ்யூ விவகாரம் தொடர்பாக விஷால் கூறிய கருத்துக்கு தனஞ்செயன் பதிலடிக் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் விளம்பரப்படுத்தும் விழாவில் விஷால் பேசும்போது, “திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை. ஒரு திரைப்படம் வெளியாகும்போது முதல் 3 நாட்களுக்கு மட்டும் திரையரங்க உரிமையாளர்கள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம். வெளியில் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்” என்று தனது பேச்சில் கூறியிருந்தார். இது திரையுலக வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது.
விஷாலின் கருத்துக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் பதிலடிக் கொடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘பிளாக்மெயில்’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக தனஞ்செயன் கலந்துக் கொண்டார்.
அவர் தனது பேச்சில் விஷால் கருத்து தொடர்பாக குறிப்பிடும்போது, “முதல் மூன்று நாட்கள் ரிவ்யூ செய்ய வேண்டாம் என்று விஷால் அண்மையில் இதே மேடையில் சொல்லியிருந்தார். அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மூன்று நாட்கள் ரிவ்யூ வரவில்லை என்றால் பெரும்பாலான படங்கள் வந்ததா என்று ரசிகர்களுக்கு தெரியாமலேயே போய்விடும். கொஞ்சம் கனிவாக, பேலன்ஸ்டாக ரிவ்யூ கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்” என்று தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.