நடிகர் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கி இருக்கிறார். பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் இந்தப் படம் ஆக.1-ம் தேதி வெளியாகிறது.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ராஜவேல் கூறும்போது, “முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது. அதை எஸ்கே புரொடக்க்ஷன் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் பணியாற்றியபோது நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது. படம் பார்க்கும்போது தெரியும்” என்றார்.