‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து ‘கூலி’ முதல் இடத்தினை பிடித்தது.
தமிழ் படங்களில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படம் முதல் நாளில் ரூ.148 கோடி வசூல் செய்தது. அதுவே தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறது ‘கூலி’. முதல் நாளில் ரூ.151 கோடி வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. மாபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. பல்வேறு வெளிநாடுகளில் ‘லியோ’ படத்தின் சாதனையை முறியடித்து வந்தது. இதனால் முதல் நாள் வசூலில் ‘லியோ’ சாதனையை முறியடிக்கும் என்று பலரும் கருதினார்கள். அதன்படியே ‘கூலி’ முறியடித்து முதல் இடத்தினை பிடித்துள்ளது.
‘லியோ’ மற்றும் ‘கூலி’ ஆகிய இரண்டு படங்களுமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வரும் வார இறுதிநாட்களில் ‘கூலி’ பெரிய வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.