’ஓஜி’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.150 கோடி கடந்து பெரும் சாதனை புரிந்திருக்கிறது.
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படம் ‘ஓஜி’. செப்டம்பர் 25-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்கு ப்ரீமியர் காட்சிகளும் திரையிடப்பட்டன. இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்திருப்பதால், திரையுலகினர் உட்பட மக்களும் கொண்டாடி வருகிறார்கள். பவன் கல்யாணுக்கு நீண்ட வருடங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றிப் படமாக ‘ஓஜி’ அமைந்திருக்கிறது.
இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.154 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தெலுங்கில் மட்டுமே வெளியாகி இந்தளவுக்கு வசூல் செய்திருப்பதால் வர்த்தக நிபுணர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் முதல் நாள் வசூலில் அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தினை பிடித்திருக்கிறது. அனைத்து மொழிகளிலும் வெளியான ‘கூலி’ திரைப்படம் முதல் நாளில் 151 கோடி தான் வசூல் செய்திருந்தது. ஆனால், அதனை முறியடித்து 154 கோடி வசூல் செய்திருக்கிறது ‘ஓஜி’.
இம்ரான் ஹாஸ்மி, ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ்ராஜ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் பவன் கல்யாண் உடன் நடித்திருந்தார்கள். ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர். முக்கியமாக, ஆந்திர அரசு முதல் நாளில் 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்றுக் கொள்ளலாம், அதிகப்படியான காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ‘ஓஜி’ படத்திற்கு வழங்கியது நினைவுக் கூரத்தக்கது.