தெலுங்குத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, 30 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு ஆக.4-ம் தேதி போராட்டத்தை அறிவித்திருந்தது. அவர்களின் கோரிக்கையைத் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை நிராகரித்துவிட்டது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், 22.5 சதவிகித ஊதிய உயர்வுக்குத் தொழிலாளர் கூட்டமைப்பு ஒப்புக்கொண்டது.
இந்த உயர்வு 3 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். முதல் ஆண்டில் 15 சதவிகிதமும் மேலும் 2-ம் ஆண்டில் 2.5 சதவிகிதமும் 3-ம் ஆண்டில் 5 சதவிகிதமும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை, தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு, தெலங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் தில் ராஜு, கூடுதல் தொழிலாளர் ஆணையர் கங்காதர் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து 18 நாட்களாக நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு மீண்டும் நேற்று தொடங்கியுள்ளது. இதற்கிடையே, பிரச்சினை யைத் தீர்க்க உதவியதற்காக முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நடிகர் சிரஞ்சீவி நன்றி தெரிவித்துள்ளார்.