பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என தெரிகிறது.
’தி ராஜா சாப்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். தற்போது தெலுங்கு திரையுலகில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இப்பிரச்சினையால் ‘தி ராஜா சாப்’ படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கி முழுவீச்சில் நடைபெறும் என்று இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தெரிவித்திருந்தார். தற்போது அதற்கு சாத்தியமில்லை என்கிறார்கள். ஏனென்றால், ‘தி ராஜா சாப்’ படத்திற்கு இன்னும் பாடல்கள் மற்றும் சில காட்சிகளை பிரபாஸ் முடித்துக் கொடுக்க வேண்டும். அதை முடித்துவிட்டு பிரபாஸ் திரும்பினாலும் அக்டோபரில் படப்பிடிப்பு சாத்தியமில்லை என்கிறார்கள்.
ஏனென்றால், ’ஸ்பிரிட்’ முதற்கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் ஒருவரை வைத்து தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் சந்தீப் ரெட்டி வாங்கா. ஆனால் பாலிவுட் நடிகரின் தேதிகள் பிரச்சினையால் அக்டோபரில் ‘ஸ்பிரிட்’ தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போது மீண்டும் நடிகர்களின் தேதிகளை வைத்து படப்பிடிப்பு பணிகளை திட்டமிட்டு வருகிறது ‘ஸ்பிரிட்’ படக்குழு.