இம்ரான் ஹாஸ்மிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ‘ஓஜி’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தனது அரசியல் பணிகளுக்கு இடையே தற்போது தான் முன்பு நடித்த படங்களுக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார். முதலாவதாக ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்து கொடுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து ‘ஓஜி’ படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.
மும்பையில் பவன் கல்யாண் – இம்ரான் ஹாஸ்மி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இதில் படப்பிடிப்பு இடையே இம்ரான் ஹாஸ்மி உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்கள். மேலும் ஒரு வாரம் கட்டாய ஓய்வில் இருக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இம்ரான் ஹாஸ்மி உடல்நிலை பாதிப்பால் ‘ஓஜி’ படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அவருக்கும் பவன் கல்யாணுக்கும் இடையேயான காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. செப்டம்பர் 25-ம் தேதி வெளியாக இருப்பதால், இம்ரான் ஹாஸ்மிக்கு உடல்நிலை சரியானவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.