வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்துக்காக, மீண்டும் உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தனது கதாபாத்திரத்துக்காக உடல் எடையை சிம்பு குறைத்திருக்கிறார். சுமார் 10 கிலோ வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே வெளியே எங்கும் வராமல் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சிம்புவின் உடல் எடையை அதிகமாக இருந்தது. அதனை முற்றிலுமாக குறைத்து தான் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்தார் சிம்பு. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமானார்கள். தற்போது அதையும் தாண்டி உடல் எடையைக் குறைத்திருப்பது பலரையும் ஆச்சரியத்துள்ளாக்கி இருக்கிறது. வெற்றிமாறன் கதை மீது அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டு இருப்பதால் 10 நாட்களில் குறைத்திருக்கிறார் சிம்பு என்கிறார்கள்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படத்தின் ஒருபகுதியாகவே சிம்பு படம் உருவாக இருக்கிறது. இது தொடர்பாக ஏற்பட்ட வதந்திகள் அனைத்துக்குமே வீடியோ பதிவின் மூலம் பதிலளித்துவிட்டார் வெற்றிமாறன். இதில் சிம்பு உடன் நடிக்க மணிகண்டன், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.