ஆதித்யா பாஸ்கர் – கெளரி கிஷன் இருவரும் புதிய படமொன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
‘96’ படத்தில் இளம் வயது விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவாக நடித்தவர்கள் ஆதித்யா பாஸ்கர் – கெளரி கிஷன் ஜோடி. இந்த ஜோடிக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது இருவரும் புதியட படமொன்றில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
கண்ணதாசன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை ராஜ்குமார் ரங்கசாமி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக எஸ்.ராமச்சந்திரன், இசையமைப்பாளராக ஜோன்ஸ் ரூபர்ட், எடிட்டராக பரத் ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள். இப்படம் குறித்து ராஜ்குமார் ரங்கசாமி, “அலட்டிக் கொள்ளாத, உறவுகள் இன்றி வாழும் ஒருவன், குடும்பம், பெற்றோர் என்று சார்ந்திருக்கும் ஒரு இளம் பெண் இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் உறவு எப்படி செல்கிறது என்பதே இப்படத்தின் கதை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் இயக்குநர் கே பாக்யராஜ், கிங்ஸ்லி, டிஎஸ்ஆர், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குநர் சாய் ரமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.