விஜய் கார்த்திகேயா அடுத்து இயக்கவுள்ள படத்திலும் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கும் 47-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தினை விஜய் கார்த்திகேயா இயக்கவுள்ளார். இவர் கிச்சா சுதீப் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘மேக்ஸ்’ படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
தாணு தயாரிப்பில் வெளியான படம் ‘மேக்ஸ்’. பலரும் ‘கைதி’ பட பாணியில் உருவாக்கி இருக்கிறார்கள் என்று கூறினாலும், விறுவிறுப்பான திரைக்கதையினால் வரவேற்பைப் பெற்றது. இதனால் மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் கிச்சா சுதீப். தற்போது கிச்சா சுதீப் உடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
‘கே 47’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக சேகர் சந்திரா, இசையமைப்பாளராக அஜ்னிஷ் லோக்நாத், எடிட்டராக கணேஷ் பாபு ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.