‘தலைவன் தலைவி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது விஜய் சேதுபதி – பாண்டிராஜ் கூட்டணி.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் ஜூலையில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார்.
‘தலைவன் தலைவி’ படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி – பாண்டிராஜ் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள படத்தை முடித்துவிட்டு, பாண்டிராஜ் படத்துக்கு விஜய் சேதுபதி தேதிகள் ஒதுக்குவார் எனக் கூறப்படுகிறது.
தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு, தற்போது பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரிக்க லைகா நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.