‘மீசைய முறுக்கு 2’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினை நிராகரித்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவா.
ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தினை சுந்தர்.சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படம் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.
இப்படத்தில் தாதாவாக நடிக்க ஹிப் ஹாப் ஆதி தன்னை அணுகியதாக தேவா தெரிவித்துள்ளார். இது குறித்து தேவா, ”ஹிப் ஹாப் ஆதி என்னை சந்தித்து கதையொன்று கூறினார். ’மீசைய முறுக்கு 2’ கதையில் நீங்கள் தான் தாதா என்று சொன்னார். ரொம்ப அற்புதமான கதை. வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
அதற்கு முதல் காரணம், இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறேன். சென்னை, இலங்கை, பாரிஸ், ஜப்பான் என தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் சரியாக படப்பிடிப்புக்கு ஒத்துழைக்க முடியாது. இரண்டாவது காரணம், எனக்கு நடிக்கத் தெரியாது. கதையில் வசனத்தை மனப்பாடம் செய்து நடிக்க வேண்டும். ஏதாவது வசனத்தை மிஸ் செய்துவிட்டால், உடனிருக்கும் நடிகர்களுக்கு தொந்தரவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.