புதுடெல்லி: ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து, அபிஷேக் பச்சனும் தனது படங்கள் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது பெயர், படம் மற்றும் போலி வீடியோக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 10) பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அபிஷேக் பச்சன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரவீன் ஆனந்த், அபிஷேக் பச்சனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏஐ மூலம் சிலர் உருவாக்கி வருவதாகவும், அவரது போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் வெளிப்படையான பாலியல் உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதாகவும் கூறினார்.
இதனையடுத்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு நீதிபதி தேஜாஸ் காரியா அபிஷேக் பச்சனின் வழக்கறிஞரைக் கேட்டுக்கொண்டார். மேலும், இந்த வழக்கு பிற்பகல் 2:30 மணிக்கு விசாரிக்கப்படும் என்றும் கூறினார்.
முன்னதாக, நடிகை ஐஸ்வர்யா ராய், தனது பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதைத் தடுக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நேற்று உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தேஜாஸ் கரியா, இதனைத் தடுப்பதற்கு உடனடி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.