‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் வடிவேலு – ஃபஹத் ஃபாசில் கூட்டணி. ட்ரெய்லர் பரவலாக கவனம் ஈர்த்திருந்தாலும் இப்படத்துக்கு எந்த வகையிலும் விளம்பரமே செய்யப்படாதது ஆச்சர்யத்தை தந்தது. அந்த அளவுக்கு பலருக்கும் தெரியாமல் ‘சைலன்ட்’ ஆக வெளியான ’மாரீசன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்துவிட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகிறார் தயாளன் (ஃபஹத் ஃபாசில்). வெளியில் வந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் தனது திருட்டு வேலைகளை தொடங்கி விடுகிறார். குளித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் செல்போன், தியேட்டரில் சாவியோடு நிற்கும் பைக் என திருடிக் கொண்டு செல்லும் வழியில் ஒரு வீட்டைப் பார்த்துவிட்டு அதற்குள் திருட நுழைகிறார். அந்த வீட்டில் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருக்கும் வேலாயுதம் பிள்ளையை (வடிவேலுவை) சந்திக்கிறார் தயா.
தனக்கு அல்சைமர் நோய் இருப்பதாகவும், தன்னை கட்டிப் போட்டு துன்புறுத்தும் தன் மகனிடம் இருந்து காப்பாற்றுமாறும் தயாவிடம் வேண்டுகோள் வைக்கிறார். வேலாயுதத்தின் வங்கிக் கணக்கில் ஏராளமான பணம் இருப்பதை அறிந்து கொள்ளும் தயா, அவருடைய ஏடிஎம் பின் நம்பரை தெரிந்து கொள்வதற்காக அவர் சொல்லும் இடத்துக்கு எல்லாம் பைக்கில் அழைத்துச் செல்கிறார். வேலாயுதம் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தயாவால் அடைய முடிந்ததா? தயாவை வேலாயுதம் எங்கெல்லாம் அழைத்துச் சென்றார் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘மாரீசன்’ திரைக்கதை.
‘மாமன்னன்’ படத்தில் இருந்ததைப் போலவே மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் வடிவேலு. சொல்லப் போனால் அந்தப் படத்தில் இருந்ததை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். அதை மிக அநாயசமாக, தனக்குள் இருக்கும் ‘காமெடியன்’ வடிவேலு எந்த இடத்திலும் எட்டிப் பார்த்துவிடாமல் ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார்.
வடிவேலுவுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஃபஹத் ஃபாஸில் உடையது. மலையாளத்தில் ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது. வழக்கம்போல தனது இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். விவேக் பிரசன்னாவுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கனமான கதாபாத்திரம், அதை அவர் கச்சிதமாக செய்துள்ளார். போலீஸாக வரும் கோவை சரளா, ஃபஹத்தின் அம்மாவாக வரும் ரேணுகா, சித்தாரா உள்ளிட்டோர் சில காட்சிகளில் வந்தாலும் ஈர்க்கின்றனர்.
எந்த பரபரப்பும் இன்றி கதாபாத்திரங்களின் அறிமுகத்துடன் நிதானமாக தொடங்கும் படம், மெல்ல முடிச்சுகள் அவிழ்ந்து இடைவேளைக்குப் பிறகு சூடுபிடிக்கிறது. நான்-லீனியரில் எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதையை கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது. ஆங்காங்கே லேசான தொய்வுகள் தென்பட்டாலும் அடுத்தடுத்த காட்சிகளில் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தில் பார்ப்பவர்களை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறன்றனர் இயக்குநர் சுதீஷ் சங்கரும், திரைக்கதை எழுத்தாளர் வி.கிருஷ்ணமூர்த்தியும்.
இடைவேளையில் தொற்றிக் கொள்ளும் பரபரப்பை கடைசி வரை கொண்டு சென்ற விதம் சிறப்பு. சில காட்சிகள் யூகிக்கக் கூடிய வகையில் இருந்தாலும் அவை பெரிய குறையாக தெரியவில்லை.
வடிவேலுவுக்கும் ஃபஹத் ஃபாசிலுக்கும் இடையிலான பிணைப்பை காட்டிய விதம் ரசிக்க வைக்கிறது. எனினும், அவர்களுக்கு இடையிலான எமோஷனல் காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை. அவற்றை இன்னும் அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கலாம். குறிப்பாக, ஃபஹத் வீட்டுக்கு வடிவேலு செல்வது, அவ்வளவு நேரம் வடிவேலு மீது ஒருவித வெறுப்புடன் இருக்கும் ஃபஹத் திடீரென அன்பு காட்டுவது போன்ற காட்சிகள் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அப்பா – மகன் பந்தம் போன்ற ஒரு பிணைப்பை காட்ட முயற்சி செய்த இயக்குநர், அதற்கான காட்சியமைப்புகளில் மெனக்கெடவில்லை.
எனினும், இயக்குநர் தான் எடுத்துக் கொண்ட சீரியஸ் த்ரில்லர் பாணி திரைக்கதைக்கு நியாயம் செய்திருக்கிறார். படத்தின் சஸ்பென்ஸ் அம்சங்களும், த்ரில்லர் காட்சிகளும் நன்றாகவே கைகொடுத்திருக்கின்றன. அவைதான் சில சலிப்பான காட்சிகளையும் கூட மறக்கடித்து படத்தோடு நம்மை ஒன்றச் செய்கின்றன. வடிவேலுவின் ஃப்ளாஷ்பேக் காட்சியும் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ’பீடோஃபைல்கள்’, சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து அழுத்தமாக பேசிய விதமும் பாராட்டுக்குரியது.
யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் தெரிகிறார். பாடல்கள் ஓகே ரகம். கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு ‘ஃப்ரெஷ்’ ஆன உணர்வை தருகிறது. முழுக்க முழுக்க ஃபஹத் ஃபாசில் மற்றும் வடிவேலுவுக்காகவே எழுதப்பட்ட படத்தில் ஆங்காங்கே லாஜிக் குறைகளும், ஒரு சில தொய்வான தருணங்களும் இருந்தாலும், ஒரு முழுமையான த்ரில்லர் அனுபவத்தை சலிக்காமல் தருகிறது ‘மாரீசன்’.