வடிவேலு – ஃபகத் ஃபாசில் காம்போவில் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
கைநிறைய பணத்துடன் மறதி நோய் பாதிக்கப்பட்ட வடிவேலு கதாபாத்திரமும், அவரிடம் இருந்து பணத்தை அபகரிக்க முனையும் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரமும்தான் ப்ரொட்டகனிஸ்டுகள். இந்த இருவரின் பயணம்தான் ஒட்டுமொத்த கதையும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.
நடப்பவை யாவற்றையும் மறந்துவிட்டு பரிதவிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக முகபாவனைகள் மூலம் ஈர்க்கிறார் வடிவேலு. அவருக்கு உறுதுணையாக இருப்பது போல் ‘நடிக்கும்’ கதாபாத்திரத்தில் படபடப்புடன் வெளுத்து வாங்குகிறார் ஃபஹத் ஃபாசில். இடையில் விசாரணை அதிகாரியாக முகம் காட்டும் கோவை சரளாவும் அசத்தலான பிரசன்ஸை தந்துள்ளார்.
வாழ்வியல் சார்ந்த சுவாரஸ்ய வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் இந்த ‘ரோடு மூவி’ நிச்சயம் நல்ல விருந்தாக இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. வடிவேலு – ஃபகத் பயணத்துக்கு இதமூட்டியிருக்கிறது இசை. ட்ரெய்லர் வீடியோ:
கதைக்களம் என்ன? – சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், லிவிங்ஸ்டன், கோவை சரளா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக கலைச்செல்வன், எடிட்டராக ஸ்ரீஜித் சாரங் மற்றும் இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் கதைக்களம் என்ன என்பதை இயக்குநர் சுதீஷ் சங்கர் பேட்டி ஒன்றில் ஏற்கெனவே விவரித்துள்ளார். அதன்படி வடிவேலு ஒரு பணக்காரர் மட்டுமன்றி அல்சைமர் நோயாளி. ஒரு கட்டத்தில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கிறார் வடிவேலு. இதனை ஃபகத் ஃபாசில் பார்த்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து வடிவேலுவிடம் இருந்து அந்தப் பணத்தை எடுத்துவிட வேண்டும் என முனைகிறார்.
இதனால், நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு ஃபகத் ஃபாசில் பைக்கில் இறக்கி விடுவதாக அழைத்து வருகிறார். இந்தப் பயணத்தில் என்ன நடந்தது என்பதுதான் கதை. இறுதியில் வடிவேலுமிடம் இருந்து ஃபகத் ஃபாசிலுக்கு பணம் கிடைத்ததா, இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ். ஆனால், ட்ரெய்லரை பார்க்கும்போது, இந்தக் கதைக்களத்தில் இரண்டு கதாபாத்திரங்களின் பின்புலன்களில் அடிப்படையில் திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.