ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இதில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் உள்ளதாகக் கூறி அந்த காட்சிகள், வசனங்களை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது வெற்றி மாறன் தரப்பி்ல், ‘மனுஷி’ படத்தில் எந்தவொரு ஆட்சேபகரமான காட்சிகளும் இடம்பெறவில்லை. விதிகளுக்கு புறம்பாக, தணிக்கை வாரியம் 37 காட்சிகளை நீக்கக்கோரியுள்ளது. இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும், என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, அந்த படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளதா, இல்லையா என்பதை படத்தைப் பார்த்து அதன்பிறகே முடிவுக்கு வரமுடியும். எனவே ஆக.24 அன்று இப்படத்தை சென்னை இசைக்கல்லூரியில் உள்ள திரையரங்கில் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்ய படக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது தணிக்கை வாரிய உறுப்பினர்களும், வெற்றி மாறனும் உடனிருக்கும்படி நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.