தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படங்களான ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்றவற்றை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக தமிழில் எடுத்த ’சர்கார்’, ‘தர்பார்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தியில் சல்மான் கானை வைத்து அண்மையில் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை கொடுத்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. ஓர் உறுதியான கம்பேக்-ஐ கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முருகதாஸ், ‘அமரன்’ வெற்றிக் களிப்பில் இருந்த சிவகார்த்தியனை வைத்து இயக்கியுள்ள படம்தான் ‘மதராஸி’. தனக்கு மிகவும் தேவைப்படும் அந்த ‘கம்பேக்’-ஐ முருகதாஸ் இந்த படத்தின் மூலம் கொடுத்தாரா என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை புகுத்தும் நோக்கி ஐந்து கன்டெய்னர் லாரிகள் முழுக்க துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் நுழைவதாக என்ஐஏ அதிகாரியான பிஜு மேனனுக்கு தகவல் கிடைக்கிறது. அவர்களை தடுக்கும் நோக்கி அதிகாரிகள் தோல்வி அடைகின்றனர். ஆயுதங்கள் அடங்கிய அந்த கன்டெய்னர்கள் ஒரு கேஸ் ஃபேக்டரிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இன்னொரு பக்கம் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் ரகு (சிவகார்த்திகேயன்), என்ஐஏ அதிகாரி பிஜு மேனன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். துப்பாக்கிக் கடத்தல் கும்பலை பிடிப்பது சாத்தியமில்லை என்று தெரியவரும் நிலையில், சாக விரும்பும் ஹீரோவை வைத்து அந்த ஃபேக்டரியை வெடிக்கச் செய்ய திட்டமிடுகிறது என்ஐஏ. அதற்காக நாயகனை தயார் செய்து அவரை அங்கே அனுப்புகிறது. அதிகாரிகள் சொன்னதை ஹீரோ நிறைவேற்றினாரா, இல்லையா என்பதுதான் ‘மதராஸி’ படத்தின் திரைக்கதை.
ஓர் அட்டகாசமான ஆக்ஷன் காட்சியுடன் படம் தொடங்குகிறது. வித்யூத் ஜம்வாலும், ஷபீர் கல்லரக்கல்லும் தங்களை தடுக்க வரும் போலீஸ் அதிகாரிகளுடன் சண்டையிடும் காட்சி உலகத் தரம். ஹாலிவுட் படங்களை விஞ்சும் வகையில் அந்த காட்சியின் ஸ்டண்ட் கலைஞர்களும், ஒளிப்பதிவாளரும் போட்டி போட்டு உழைத்துள்ளனர்.
இப்படியாக பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டி மெயின் கதைக்குள் நுழையும் படம், அடுத்தடுத்த காட்சிகளில் எழுந்து நிற்க தடுமாறுகிறது. ஓர் அதிரடியான ஆக்ஷன் காட்சிக்கு அடுத்த காட்சியே ஒரு காதல் தோல்வி பாடல். என்ஐஏ உயர் அதிகாரி பிஜு மேனன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே மருத்துவமனைக்கு, தற்கொலைக்கு முயலும் சிவகார்த்திகேயன் வருவது வரை சரி. அதற்காக சம்பந்தமே இல்லாமல் பிஜு மேனனை தேடித் தேடிச் சென்று தன் கதையை சிவகார்த்திகேயன் சொல்வதெல்லாம் நம்பும்படி இல்லை.
அதிலும் சிவகார்த்திகேயன் – ருக்மிணி வசந்த் காதல் காட்சிகள் எல்லாம் படத்துடன் ஒட்டவே இல்லை. ‘கஜினி’ டைப் காதல் காட்சிகள் வைக்கிறேன் பேர்வழி என எந்தவித உயிரோட்டமும் இல்லாத காட்சிகளை எழுதியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். ’கஜினி’ போலவே இதிலும் ஹீரோவுக்கு ஒரு பிரச்சினை. ஆனால் எந்த வகையிலும் அது பார்க்கும் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கான பின்னணியும் வலுவாக இருந்தாலும். அது சொல்லப்பட்ட விதம் அழுத்தமாக இல்லை. படம் தொடங்கிய முதல் அரை மணி நேரத்தில் மூன்று பாடல்களை வைத்திருப்பதே திரைக்கதையில் சரக்கு இல்லை என்பதை காட்டி விடுகிறது.
படத்தின் ஒரு காட்சியில் நிலநடுக்கம் வந்து சிவகார்த்திகேயன் பணிபுரியும் அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் ரோட்டுக்கு ஓடி வருகின்றனர். அப்போது அனைவரும் தங்கள் வீட்டுக்கு போன் செய்து பேசுகின்றனர். தனக்கு யாரும் இல்லையே என சிவகார்த்திகேயனும் போனை சும்மா காதில் வைத்து போலியாக பேசுகிறார். திடீரென அனைவருடைய சிக்னலும் போய்விடுகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் மட்டும் பேசிக் கொண்டே இருக்கிறார். உடனே அனைவரும் நிலநடுக்கம் வந்ததையே மறந்துவிட்டு சிவகார்த்திகேயனை கேலி செய்கின்றனர். எமோஷனல் என்ற பெயரில் முழுக்க முழுக்க நெஞ்சை நக்குவதற்காகவே வைக்கப்பட்ட ஒரு காட்சி. காரணம் ஹீரோவின் வேலை, ஆபீஸ் குறித்து படத்தில் இதைத் தவிர ஒரு காட்சி கூட கிடையாது.
லிவிங்ஸ்டன் வீட்டை நாயகி ருக்மிணி வசந்த் கண்டுபிடிப்பது எப்படி? மனதளவில் பிரச்சினை கொண்ட ஹீரோ எப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்? சிவகார்த்திகேயனை விட்டு பிரிந்து செல்வதற்கு நாயகி சொல்லும் காரணம் என ஏகப்பட்ட அபத்தங்கள்.
படத்தின் இடைவேளை காட்சி ஆடியன்ஸின் கைதட்டலை பெறும் அளவுக்கு நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. படம் முழுக்க சிவகார்த்திகேயனின் ஒன்லைன் கவுன்டர்கள் ரசிக்கும்படி உள்ளன.
ஹீரோவாக சிவகார்த்திகேயன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக விபத்தில் அடிபட்டவர்களை ஒவ்வொருவராக தூக்கிச் செல்லும் காட்சியில் அவரது நடிப்பு அருமை. நாயகியாக ருக்மிணி வசந்த். நடிப்பிற்கு பெரிய வாய்ப்பு இல்லை. ஆனாலும் படம் முழுக்க ஈர்க்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கும் பிஜு மேனன் வழக்கம்போல தனது சீரியஸ் நடிப்பை கச்சிதமாக செய்திருக்கிறார்.
அனிருத்தின் இசையும், பாடல்களும் பெருத்த ஏமாற்றம். சமீபகாலமாக வெளியாகும் சில படங்கள் எப்படி இருந்தாலும் அனிருத் தனது வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்தார். ஆனால் இங்கே நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு பாடல்களோ, பின்னணி இசையோ இல்லை என்பதே நிதர்சனம். ஒளிப்பதிவாளர் சுதீப் இளமோனின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. ஸ்டன்ட் இயக்குநர் கெவின் குமாரின் ஆக்ஷன் காட்சிகள் அனல் பறக்கின்றன.
வெறுமனே நான்கைந்து நல்ல காட்சிகளை எழுதிவிட்டு அதற்காக அவசரகதியில் ஒரு திரைக்கதையை எழுதி முடித்ததைப் போல இருக்கிறது முழு படமும். ஆரம்ப ஸ்டன்ட் காட்சியிலும், இடைவேளை காட்சியிலும் கொடுத்த உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் திரைக்கதையில் போட்டியிருந்தால் இன்னொரு ‘கஜினி’யாகவோ, ‘துப்பாக்கி’யாகவோ கொண்டாடப்பட்டிருக்கும் இந்த ‘மதராஸி’.