‘மதராஸி’ படத்தின் கதைக்களம் உள்ளிட்ட விவரத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துள்ளார். அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான பேட்டிகளை அளிக்க தொடங்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் உள்ளிட்ட சில சுவராசியங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஏ.ஆர்.முருகதாஸ், “‘மதராஸி’ படத்தின் களம் காதலை மையப்படுத்தி நடக்கும் பெரிய ஆக்ஷன் கதையாகும். ‘கஜினி’ போலவே இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான். ஆனால், இதில் காதல் தான் மையப்புள்ளியாக இருக்கும்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட பாட்டுக்கான ப்ரோமோ எனது திட்டம் இல்லை. அது முழுக்கவே சிவகார்த்திகேயன் – அனிருத் இருவரும் சேர்ந்து உருவாக்கியது தான். இந்தியில் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க கேட்டபோது கூட மறுத்துவிட்டார் வித்யூத் ஜாம்வால். ஆனால், நான் ‘மதராஸி’ படத்துக்காக அணுகியபோது, கதை என்னவென்றாலும் நடிக்கிறேன் என்று கூறினார். அவருடைய கதாபாத்திரம் மட்டுமன்றி பிஜு மேனன் மற்றும் ஷபீர் ஆகியோரது கதாபாத்திரங்களும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
‘மதராஸி’ படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜாம்வால், பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.