சமீபத்தில் இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் ஆகியோரது படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் இணையத்தில் பலரும் இருவரையும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இருவரையும் அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது என்று ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் மற்றும் ஷங்கர் படங்கள் தோல்வி குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில், “மணி சார் மற்றும் ஷங்கர் சார் இருவரின் ஒரு படத்தின் தோல்வியை வைத்து அவர்களை எடை போட்டுவிட முடியாது. ஷங்கர் சாரை ஒரு சாதாரண கமர்ஷியல் இயக்குநராக எடுத்துக்கொள்ள முடியாது. பிரம்மாண்ட படங்களில் வீட்டுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய ஒரு மெசேஜ் சொல்கிறார்.
ரோட்டில் செல்பவர்களுக்கு ஒன்றும் ஆகாது. ஆனால், தனி ஆளாக இறங்கி ரோடு போட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முள் குத்தும், கல் தடுக்கி விடும். மணி சாருக்கு மட்டும் எப்போதும் முள் குத்துகிறது என்று நினைக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் எல்லாம் ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரோட்டில் போய் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அது பல பேர் போட்ட ரோடு, அதில் வெற்றி கிடைக்கத்தான் செய்யும்.
மணி சார், ஷங்கர் சார் எல்லாம் கடுமையான உழைப்பாளிகள். அவர்களின் படம் தோல்வி என்று விட்டுவிட முடியாது. அவர்களுக்கு நான் ரசிகன். எவ்வளவுதான் உலகப் படங்கள் பார்த்தாலும், நம் ஊரில் பாரதிராஜா சார், பாலசந்தர் சார் என முன்னோடிகள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் காட்சிகளை சொன்ன விதம் எல்லாம் இந்தியாவிலேயே யாரும் சொல்லியிருக்க முடியாது.
பெரிய சாதனைகள் செய்த எல்லாருமே தமிழ் இயக்குநர்கள்தான். மற்ற மொழிகளில் எல்லாம் ரூ.100 கோடி படங்கள் வருகிறதே என்று நினைக்கிறோஒம். ஆனால், மற்ற மொழி இயக்குநர்கள் எல்லாம் பொழுதுபோக்கு படங்கள்தான் எடுக்கிறார்கள். தமிழ் இயக்குநர்கள் மட்டுமே என்ன பண்ண வேண்டும், பண்ணக் கூடாது என்று கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற மொழி திரையுலகிற்கும் தமிழுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.