சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை (செப்.13) அன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழாவை நடத்தியது.
இதில் தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இளையராஜா பங்கேற்று சிறப்பித்தார். அவரது சிம்பொனி இசையும் அரங்கேற்றப்பட்டது.
இந்த சூழலில் தனக்கு தமிழக அரசு நடத்திய பாராட்டு விழா குறித்து அவர் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: “அனைவருக்கும் வணக்கம். நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. உள்ளத்தில் நினைப்பதை எல்லாம் வார்த்தையாக வெளியில் வருவது என்பது அந்தந்த நேரத்தையும், சூழலையும் பொறுத்து அமைகிறது. நேற்று எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவ்வளவு ஆனந்தம்.
பாராட்டு விழாவை இவ்வளவு சிறப்பாக முதல்வர், அமைச்சர்கள், தலைமை செயலர் என எல்லோரும் ஈடுபாட்டுடன் நடத்தினர். அதானல் என்னால் அதிகம் பேச முடியவில்லை.
‘எதற்காக இந்த பாராட்டு விழா, ஏன் இப்படி செய்கிறீர்கள்’ என நான் முதல்வரிடம் கேட்டேன். பல பேர் இது குறித்து பல விதமாக சொல்லலாம். நான் போட்ட இசை கூட அதற்கான காரணமாக இருக்கலாம். அதை முதல்வர் தான் சொல்ல வேண்டும். நான் இதையெல்லாம் எதிர்பார்ப்பவனும் அல்ல. அப்படிப்பட்ட எனக்கு பாராட்டு விழா நடத்தி உள்ளார்.
சிம்பொனியின் சிகரம் தொட்டதால்தான் பாராட்டு விழாவை நடத்த முதல்வர் முடிவு செய்திருப்பார் என நான் கருதுகிறேன். உலக சாதனை படைத்த தமிழனை பாராட்டுவது தமிழக அரசின் கடமை என முதல்வர் கருதியிருக்கலாம்.
இந்த பாராட்டு விழாவில் என்னிடம் சில வேண்டுகோளை முதல்வர் வைத்தார். அது சங்கத்தமிழ் நூல்களுக்கு நான் இசையமைக்க வேண்டுமென சொன்னார். அவரது வார்த்தைகள் எனக்கு ஊக்கம் தருகிறது. அவரது வேண்டுகோளை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி விழாவில் எந்த குறையும் இல்லை. இதில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நேரில் வந்து சிறப்பித்தது அதற்கு மகுடம் சேர்த்தது போல அமைந்தது. ரசிகர்களுக்கு இந்த விழா மகிழ்ச்சியை தந்திருக்கும்.
இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நிச்சயம் மக்களுக்காக இன்னொரு நிகழ்ச்சியை நான் நடத்துவேன். இதை நான் மேடையில் பேசியபோது சொல்லி இருந்தேன். அந்த நாளினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்தார்.
நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு… pic.twitter.com/uYu2tM2dnX
— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 14, 2025