‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை இயக்கிய எஸ். ஆர். பிரபாகரன் அடுத்து, ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘றெக்கை முளைத்தேன்’. இதில் தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாடலுக்கான இசையை தீசன் அமைக்க, தரண் குமார் பின்னணி இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் பற்றி எஸ். ஆர். பிரபாகரன் கூறும் போது, “இந்தமாதிரி படங்களைத் தான் இவர் எடுப்பார் என்ற சூழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இதை க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாக்கியுள்ளேன். கல்லூரியில் சேர்ந்ததும் புதிய சிறகுகள் கிடைத்தாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாகத் தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பாக இப்படத்தின் கதை செல்லும். ஆகஸ்ட்டில் திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.