கடந்த 2023-இல் சரத்குமார் – அசோக்செல்வன் இணை, ‘போர்த் தொழில்’ படத்தில் பெரிதும் பேசப்பட்டது. அந்தப் படத்தை இயக்கிய புதிய தலைமுறை இயக்குநரான விக்னேஷ் ராஜா அடுத்த யாரை இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு உருவானது. அதற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் அதன் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் அந்தப் படத்தில், இயக்குநர் விக்னேஷ் ராஜாவிடம் சரண்டர் ஆகியிருக்கும் அந்த மாஸ் ஹீரோ நம்ம தனுஷ். இது அவர் நடிக்கும் 54-வது படம். தடபுடலான பூஜையுடன் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது.
‘போர் தொழில்’ படத்தின் திரைக்கதையில் அவருடன் இணைந்து பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷ், இந்தப் படத்தின் திரைக்கதையிலும் இயக்குநருடன் இணைந்துள்ளார். மற்றொரு சூடான செய்தி, இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடி மமிதா பைஜு. இவர்களுடன் கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நடிகர்களும் இணைந்திருகிறார்கள்.
இந்தப் படத்தின் சூடு இத்துடன் முடியவில்லை; தனித்துவமான ஒளிப்பதிவுக்கு பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மெலடிகளின் இளவரசன் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கதைசொல்லலில் புதுமையை பின்பற்றும் ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். படத்தின் கதை குறித்தோ, தலைப்பு குறித்தோ படக்குழு இப்போதைக்கு வாயைத் திறப்பதாக இல்லை.