முதன்முதலில் இப்படத்தின் டீசர் வெளியான போதே இப்படம் குறித்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் தீயாய் எரியத் தொடங்கிவிட்டது. குறிப்பிட்ட சமூக உணர்வுகளை புண்படுத்துவதாகவும், பதின்பருவ பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி எனவும் இப்படத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றம் வரை சென்று சென்சாரில் பல ‘கட்’களை பெற்று ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘பேட் கேர்ள்’.
கதை நாயகியான ரம்யா (அஞ்சலி சிவராமன்) என்ற பெண்ணின் வாழ்க்கையின் மூன்று பருவங்களை, அதில் அவர் சந்திக்கும் ஆண்கள், அவருடைய காதல்கள், பதின்பருவ ஏக்கங்கள் ஆகியவற்றை பேசுகிறது படம்.
தமிழில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு பெண்ணின் பார்வையில் ஒரு பெண் இயக்குநரின் வாயிலாக சொன்ன படங்கள் எதுவென்று யோசித்து பார்த்தால் அப்படி இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான எந்தப் படமும் இல்லை என்பதே பதிலாகும். ‘ஆட்டோகிராஃப்’, ‘அட்டகத்தி’ போன்ற படங்கள் ஆண்களின் வாழ்க்கையை ஆணின் பார்வையில் பேசின. ஆனால், ஒரு பெண்ணின் காதல்களையும், தன்னுடைய ஒவ்வொரு பருவத்திலும் அவள் எதிர்கொள்ளும் விஷயங்களையும் ஒரு பெண்ணே பேசும் படைப்பாக வந்துள்ளதுதான் இந்த ‘பேட் கேர்ள்’ படம்.
உலக சினிமாக்கள் முதல் ஹாலிவுட், பாலிவுட் வரை இந்த வகை ‘கமிங் ஆஃப் ஏஜ்’ திரைப்படம் ஏராளமாக வந்துவிட்டன. தமிழில் எப்போதாவது தொடப்படும் இந்த கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத். நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, காட்சியமைப்பு என அனைத்தும் ஒரு ஃப்ரெஷ் ஆன உணர்வை தருகின்றன.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள்தான் ஒன்லைன் என்றாலும் கூட முன்பு குறிப்பிட்ட ‘ஆட்டோகிராஃப்’ ‘அட்டகத்தி’, ‘பிரேமம்’ பாணியிலான திரைக்கதை உத்தியை பயன்படுத்தாமல் முற்றிலும் புதிய கோணத்தில் அணுகியிருப்பது சிறப்பு. நாயகியின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சில கேள்விகளை அப்படியே ஆடியன்ஸின் பார்வையில் விட்டிருப்பதும் கூட நல்ல உத்தி.
படத்தின் முதல் காட்சியிலிருந்தே நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை படத்தின் பலம். நாயகியின் மன ஓட்டங்களும், அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பார்வையாளர்களுக்கும் அதே உணர்வை கடத்துகின்றன. பதின் பருவத்தை கடந்து வருபவர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களை படம் வெளிப்படையாக பேசுகிறது. படத்தில் பேசப்படும் விஷயங்களை நிச்சயமாக ஆண்களும் தங்களோடு தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்.
படத்தின் மற்றொரு பெரிய பலம் அதன் நடிகர்கள்தான். ‘கோபால்ட் ப்ளூ’ படத்திலும் ‘பிஎம் செல்ஃபிவாலி’, ‘க்ளாஸ்’ போன்ற வெப் தொடர்களிலும் நடிப்பால் கவனம் ஈர்த்த அஞ்சலி சிவராமன் இதில் ஒற்றை ஆளாக படம் முழுக்க தனது ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியின் அம்மாவாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரிய திரைக்கு வந்திருக்கும் சாந்தி ப்ரியாவுக்கு கனமான பாத்திரம். அதை அவர் திறம்பட செய்திருக்கிறார். பாட்டியாக வரும் பார்வதி பாலகிருஷ்ணன், தோழியாக வரும் சரண்யா ரவிச்சந்திரன், நாயகியாக ஆண் நண்பர்களாக வருபவர்கள் என அனைவருமே போற்றத்தக்க நடிப்பை தந்திருக்கின்றனர்.
படத்தின் குறிப்பிட்டு பாராட்டப்படவேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர்களான ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோர். நாயகியின் ஒவ்வொரு பருவத்திலும் ஒளிப்பதிவில் வெரைட்டி காட்டி அதற்கான மனநிலையை பார்வையாளர்களுக்கு ‘செட்’ செய்வதில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு அசர வைக்கிறது. அமித் திரிவேதியின் பின்னணி இசை படத்துக்கு தேவையான இடங்களில் ஒலித்து கதையின் போக்குக்கு உதவியிருக்கிறது.
படத்தின் குறையென்று பார்த்தால் ஒட்டுமொத்த படத்தையும் ஒருவித சீரியஸ் தன்மையிலேயே சொல்ல முயன்றிருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை வெவ்வேறு கட்டங்களாக சொல்லும்போது சில கலகலப்பான தருணங்களே இல்லையா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.
இதைத் தாண்டி குடும்ப அமைப்புகளில் பெண்களால் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல்கள், ஒருபக்கம் தன் மகளிடம் கடுமை காட்டி ஒடுக்க முயலும் ஒரு பெண், இன்னொரு பக்கம் சமூகம் என்னும் கட்டமைப்பில் பாதிக்கப்பட்டவராக இருக்கும் முரண் போன்ற பல்வேறு நுணுக்கமான விஷயங்களை காட்டியதிலும், இதுவரை தமிழ் சினிமாவில் பெண்கள் குறித்த உருவாக்கப்பட்டிருந்த கற்பிதங்களை உடைத்த விதத்திலும் இயக்குநர் வர்ஷா பரத் ஜெயித்திருக்கிறார்.
ஆண்களைப் பற்றி ஆண்களே சொல்லும், பெண்களின் கதையையும் ஆண்களே சொல்லும் ஒரு திரைச்சூழலில் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாதையையும், சமூகம் மற்றும் குடும்பத்தால் அவள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளையும் ஒரு பெண்ணே பேசும் இந்த ‘புரட்சிகர’ முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதே!