
என்னுடைய மந்திரவாதி நண்பன் ரவி, ஏதோ செய்த சேட்டைக்காக நயினார் ஆசிரியர் அடித்துவிட்டார். நாங்கள் வீட்டுக்கு போன பின் விளையாடுவதற்காக மீண்டும் ஸ்கூல் மைதானத்துக்கு வந்தோம். இவன் அங்கு நின்றிருந்தான்! “என்னடா இங்க நிற்கிற? என்று கேட்டோம். “இல்லடா, நயினார் வாத்யார் என் தலையில அடிச்சிட்டார். அதனால ஹெட்மாஸ்டர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண போறேன், அதுக்குத்தான் நிற்கிறேன். என் தலையில ரத்தம் வருதா பாரு?” என்று கேட்டான்.
நான் பார்த்த போது ஒரு துளி ரத்தமில்லை! அவனை பயமுறுத்துவதற்காக ‘என்னடா இவ்வளவு ரத்தம்” என்று சொன்னேன். அதை நிஜம் என்று நம்பி, ‘ஹெட் மாஸ்டர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி, இனி அவர் யாரையும் அடிக்க விடாம பண்றேன்” என்று காத்திருந்தான். “சரி, போ, உள்ள போலாம் போ” என்று சொன்னேன். அவன், “இருடா… கொஞ்சம் அழுதுக்கிறேன்” என்று ரிகர்சல் பார்த்தான். பிறகு கண்ணீரோடு அவர் அறைக்குள் நுழைந்தான். அங்கு அவர் இல்லை. பின் கதவு வழியாக ஏற்கெனவே வீட்டுக்கு சென்றிருந்தார்.

