சென்னை: திரைப்படங்களை பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டனர் என்று இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் இது குறித்து கூறியது: “தமிழ் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்கள் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அது நாளுக்கு நாள், வாரா வாரம் மோசமாகி வருகிறது. முன்பு நம்மிடையே விமர்சகர்கள் இருந்தனர். இப்போது நம்மிடம் இருப்பவர்கள் விமர்சகர்கள் அல்ல. அவர்களின் இலக்கு வேறு. அவர்கள் பயன்படுத்தும் மொழி, அவர்கள் பேசும் விதம் மற்றும் அவர்கள் குறிவைப்பது மிகவும் நாகரிகமற்ற முறையில் உள்ளது.
அவர்களுக்கு ஒரு அஜெண்டா உள்ளது. அவர்கள் முதல் வார வசூலை குறிவைக்கின்றனர். அப்படி செய்தால் அடுத்த முறை தயாரிப்பாளர்கள் அவர்களிடம் வருவார்கள் என்று அவர்களுக்கு தெரியும். பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்கள் இப்போது 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டனர். நேர்மையான விமர்சகர்களுக்கு ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யும் திறமை இல்லை.
இது பாக்ஸ் ஆபீஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காரணம், இதன் அடிப்படையில் தான் மக்கள் ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்கின்றனர். இதற்கான ஒரு நெறிமுறையை தயாரிப்பாளர்கள் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று பிரேம்குமார் பேசினார்.