அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம்,‘புஷ்பா’. சுகுமார் இயக்கிய இந்தப் படம், 2021-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கு மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றதால், இதன் அடுத்த பாகமான ‘புஷ்பா 2’, 2024-ல் ரிலீஸானது.
இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனாவுடன் பஹத் ஃபாசில், ஜெகபதி பாபு, சுனில் உள்பட பலர் நடித்தனர். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அதிகம் வசூலான இந்திய படங்களில் இரண்டாவது இடத்தை இது பிடித்திருக்கிறது. இதன் அடுத்த பாகம் உருவாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அல்லு அர்ஜுன் மற்ற படங்களில் பிசியாகி விட்டதால், புஷ்பா 3 உருவாகாது என்று செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், துபாயில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சுகுமார், ‘புஷ்பா3’ கண்டிப்பாக உருவாகும் என்று தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சுகுமார், ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இப்படங்களை இருவரும் முடித்தபின், புஷ்பா 3 உருவாகும் என்று தெரிகிறது.