ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கரிகாலனை (சம்பத்) கொலை செய்த குற்றத்துக்காக, சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்படுகிறார், 17 வயது சூர்யா (சூர்யா சேதுபதி). அவரை, அந்த பள்ளியிலேயே தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்புகிறார், கொல்லப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரின் மனைவி மாயா (வரலட்சுமி சரத்குமார்). ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா, சட்டப்பேரவை உறுப்பினரைக் கொன்றது ஏன்? அவருடைய ஆட்களிடம் இருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா? என்பது கதை.
இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அனல் அரசு ஸ்டன்ட் இயக்குநர் என்பதால் ஒரு பழிவாங்கும் கதையை, ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க நினைத்திருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி கதையை ஊறுகாய் போல வைத்துக் கொண்டு ஆக்ஷன் காட்சிகளை அதிரடியாகத் தந்திருக்கிறார். மிரட்டுகிற அக்காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் தொடர்ந்து வருகிற, அதே போன்ற காட்சிகளும் தெறிக்கும் ரத்தமும் ஒரு கட்டத்தில் சோர்வடைய வைக்கின்றன.
‘ஹீரோ எப்படி இத்தனை பேரை தாக்க முடியும்?’ என்று எழும் கேள்விக்கு பிளாஷ்பேக்கில் வரும் ‘மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்’ பின்னணி, லாஜிக்கான பதிலாக இருக்கிறது. பழைய கதைதான் என்றாலும் அதைப் புதுமையாகச் சொல்ல திரைக்கதையில் இயக்குநர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். எளிதாக யூகிக்க முடிகிற காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துவிடுகிறது. ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, ஒரு 17 வயது சிறுவனின் துறுதுறுப்போடும் கோபத்தோடும் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்துகிறார். இரண்டாம் பாதியில் நடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அடுத்தடுத்த படங்களில் இன்னும் சிறந்த நடிப்பை அவரிடம் எதிர்பார்க்கலாம்.
ஏழை அம்மா தேவதர்ஷினி, கொடூரமான எம்.எல்.ஏ, சம்பத், அவருடைய கோபக்கார மனைவி வரலட்சுமி, அரசியல்வாதி அப்பா அஜய் கோஷ், ஹீரோவின் அண்ணன் விக்னேஷ், அவர் காதலி அபி நட்சத்திரா, போலீஸ் அதிகாரி ஹரீஷ் உத்தமன், ஆடுகளம் நரேன், முருகதாஸ், வேல்ராஜ், ஸ்ரீஜித் ரவி என துணை கதாபாத்திரங்கள், கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். இரண்டு மணி நேரப் படத்தின் வேகத்தைக் கூட்ட வேல்ராஜின் ஒளிப்பதிவும் சாம் சிஎஸ்-சின் பின்னணி இசையும் பிரவீன் கே.எல்-லின் படத் தொகுப்பும் கடுமையாக உழைத்திருக்கிறது. பீனிக்ஸ் – ஆக்ஷன் பிரியர்களுக்கு ஓகே.