அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி நடித்து ஜூலை 4-ம் தேதி வெளியான படம், ‘பீனிக்ஸ்’. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில், படத்தில் நடித்த மூணாறு ரமேஷ், ஆடுகளம் முருகதாஸ், நடிகர் திலீபன், காக்கா முட்டை விக்னேஷ், தயாரிப்பாளர் ராஜலட்சுமி அனல் அரசு என பலர் கலந்துகொண்டனர். இயக்குநர் அனல் அரசு பேசும்போது, “நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்த பிறகு இயக்குநராக முடிவு செய்தேன். 32 வருடங்களாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். ஒரு படத்தைத் தயாரிக்கும் அளவுக்கு இன்று வளர்ந்துள்ளேன். இந்த படத்தின் வெற்றி எனக்கு மட்டும் பயன் அளிக்காது. இதில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் பயனளிக்கும்.
சூர்யாவை விமர்சித்து டிரோல் செய்வோருக்கு நான் சொல்லிக்கொள்வது, “நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை. இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப்பார்த்துள்ள அனைவருடைய வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள். இதை சூர்யா விஜய் சேதுபதி படமாக மட்டும் பார்க்காமல், 28 இளைஞர்களின் வாழ்க்கையாகப் பாருங்கள்.
இந்த கதை சூர்யாவுக்கு எழுதியது இல்லை. ஆனால் சூர்யா இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய கடின உழைப்பை, கூடவே இருந்து பார்த்து உள்ளேன். இந்த வயதில் அதிக உழைப்பைக் கொடுத்துள்ளார். சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” என்றார்.