பிரபல பாடலாசிரியர் பூவைச் செங்குட்டுவன் (90) சென்னையில் காலமானார்.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்த, பூவை செங்குட்டுவன், 1967-ம் ஆண்டு முதல், திரைப்பாடல்கள் எழுதி வந்தார். ஆயிரத்துக்கு அதிகமான திரைப் பாடல்களை எழுதியுள்ள இவர், பக்தி பாடல்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் அதிகமான தனிப் பாடல்களையும் எழுதி உள்ளார்.
எம்.ஜி.ஆரின் ‘புதிய பூமி’ படத்தில் இடம்பெறும், ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’, அகத்தியர் படத்தில் ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’, ராஜராஜ சோழன் படத்தில், ‘ஏடு தந்தானடி தில்லையிலே’, கந்தன் கருணை படத்தில், ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ , ‘கவுரி கல்யாணம்’ படத்தில் ‘திருப்புகழைப் பாடப் பாட’ உள்பட ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார்.
பாடல்களுடன் நாட்டிய நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களையும் எழுதியுள்ள இவருக்கு, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகிய 5 முதல்வர்களுக்குப் பாடல் எழுதிய பெருமையும் உண்டு. அண்ணாதுரை ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் ‘அறிஞர் அண்ணா ஆட்சி தானிது’ என்ற தனி இசைத்தட்டுப் பாடல், கருணாநிதிக்காக, ‘கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும்’, இன்றைய முதல்வர் ஸ்டாலினின் நாடகங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார்.
சென்னை பெரம்பூரில் வசித்து வந்த இவர், உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார். இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. அவர் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த பூவை செங்குட்டுவனின் மனைவி காந்திமதி, ஏற்கெனவே காலமாகி விட்டார். அவருக்குப் பூவை தயாநிதி, ரவிச்சந்திரன் என்ற மகன்கள், கலைச்செல்வி, விஜயலட்சுமி ஆகிய மகள்கள் உள்ளனர்.