மலையடிவார கிராமமான காளகம்மாபட்டியில், ஒற்றுமையாய் வாழ்ந்த மக்கள், காலப்போக்கில் வேற்றுமைகளை வளர்த்துக்கொண்டு, காளப்பட்டி, கம்மாபட்டி எனப் பிரிந்துவிடுகிறார்கள்.
அவர்களை ஒன்றுசேர்க்கப் போராடுகிறான் கதிர் (காளி வெங்கட்). அவனுடைய உயிர் நண்பன் மணி (அர்ஜுன் தாஸ்), இந்த ஊர்களை விட்டே போய்விடலாம் என்கிறான். மறுக்கும் கதிர், ஒரு நாள் இறந்துவிட, ஒரு கட்டத்தில், ஊரின் பூசாரி, ‘கதிர்தான் நம்ம குலசாமி’ என்கிறார். ‘பிரிந்தவர்கள் ஒன்றிணைந்து அவருக்கு இறுதிச் சடங்கு செய்தால் ஊருக்கு விடியல் பிறக்கும்’ என்கிறார். அதை இரு தரப்பும் ஏற்றார்களா? ஊரை ஒன்றிணைக்கும் மணி எடுத்த முயற்சிகள் வெற்றி பெற்றதா என்பது கதை.
தமிழ்நாட்டின் பல ஊர்களில் சாதியின் கொடுக்கு என்பது, வழிபாடு, நாட்டார் தெய்வ நம்பிக்கை ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. அதை, கற்பனையும் உண்மையும் கச்சிதமாக இணையும் கதைக் களம், விளிம்புநிலைக் கதாபாத்திரங்கள் வழியாக, நகைச்சுவையும் எள்ளலும் கலந்த சமூக விமர்சனமாகச் சித்தரித்து, பொழுதுபோக்கு சினிமாவாக தந்திருக்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட்.
திரைக்கதை கோரும் முக்கிய தருணங்களில் கதிரின் சடலத்திலிருந்து வெளியேறும் சத்தத்தை, அந்த மக்கள், தங்களுடைய குலசாமியின் இசைவான அருள்வாக்கின் பகுதியாக ஏற்கிறார்கள். இந்தச் சித்தரிப்பு கதிரின் கதாபாத்திர வார்ப்புடன் இணைந்துவிடுவதால், நடிகர்களின் பங்களிப்பைத் தாண்டி இயக்குநரின் மீடியமாக படம் ஒளிர்கிறது. அதேபோல், ‘சவுண்ட்’ டிசைனரின் நுணுக்கமான உழைப்பு, கதையின் முக்கிய தருணங்களுக்கு நம்பகத்தைச் சேர்ந்திருக்கிறது.
சடலமாக நடிப்பது பெரும் சவால். தன்னுடைய அபாரமான உடல்மொழி, சலனமற்ற முகத்தின் வழியாக சடலமாக நடித்து சாதித்துக் காட்டியிருக்கிறார் காளி வெங்கட். அவருடன் ஆழமான நடிப்பால் அசரடித்திருக்கிறார், அர்ஜுன் தாஸ். இதுவரை பார்க்காத கதாபாத்திரம் அவருக்கு. அப்பா – அம்மா இருவருமே பெயர் பெற்ற நடிகர்கள் என்பதை மனதில் வைத்து தரமான நடிப்பைத் தந்திருக்கிறார் ஷிவாத்மிகா ராஜசேகர். அனுபவ நடிகர்களான நாசர் மற்றும் அபிராமியை வீணடித்திருக்கிறார்கள்.
டி.இமானின் இசையும் ராஜ்குமாரின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பலமாக இருக்கின்றன. மகிழ்நனின் வசனங்கள் சில இடங்களில் கவனிக்க வைக்கின் றன.
கையில் கயிறுகட்டி சுயச் சாதியை விளம்பரப் படுத்தும் இழிநிலை மீது ஓர் உயர்தரமான விமர்சனத்தை வைத்துள்ள இப்படம், தன்னுடைய நகைச்சுவை எள்ளலுக்காக மட்டுமல்ல; அது கொண்டிருக்கும் த்ரில்லர் தன்மையினாலும் இறுதிக்காட்சி வரையிலும் ரசிக்க வைக்கிறது.